You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமலா ஹாரிஸின் பயணக்குழுவில் சிலருக்கு ஹவானா மர்ம நோய் அறிகுறி - என்ன நடந்தது?
ஹவானா நோய் அறிகுறியை போன்றதொரு சம்பவத்தால் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்நாம் பயணம் தாமதமானது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மர்ம நோய் அறிகுறி, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு க்யூபா தலைநகர் ஹவானாவில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடா தூதரகத்தில் உள்ளவர்களை தாக்கியது. இந்த நோய் மைக்ரோவேவ் கதிர்வீச்சின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் இந்த அறிகுறி தென்படத் தொடங்கியபோது, கமலா ஹாரிஸ் சிங்கப்பூரில் இருந்தார்.
இந்த நோய் அறிகுறியால் யார் பாதிக்கப்பட்டனர் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு, இதற்கு முன்பு பிற இடங்களில் ஏற்பட்ட ஹவானா நோய் அறிகுறியை போன்று இருப்பதாக சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை, சிங்கப்பூரிலிருந்து வியட்நாம் செல்லும் கமலா ஹாரிஸின் பயண திட்டம், வியட்நாமில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான சுகாதார பிரச்னை ஒன்றால் தடைபட்டதாக செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.
மிகவும் கவனமாக நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு கமலா ஹாரிஸ் மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் வியட்நாமிற்கு புறப்பட்டதாகவும் தற்போது அவர் ஹனோயில் இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
வியட்நாமில் ஹவானா நோய் அறிகுறி ஏற்படுவது இது முதல் முறையல்ல என மூத்த அதிகாரி ஒருவர் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வார இறுதியில் இரு அமெரிக்க ராஜீய அதிகாரிகளின் வீட்டில் இருவருக்கு இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து மேலும் தகவல்களை பெற அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.
2016ஆம் ஆண்டு க்யூபாவில் இந்த ஹவான நோய் அறிகுறி முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு சீனாவிலும் கடந்த மாதம் ஆஸ்திரியாவில் ஒருவருக்கும் இந்த நோய் குறைபாடு கண்டறியப்பட்டது.
நூற்றுக்கணக்கான அமெரிக்க ராஜிய அதிகாரிகள், வாந்தி, தீவிர தலைவலி போன்ற அறிகுறிகளுடன் உடல் குறைவு ஏற்பட்டது.
க்யூபாவில் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான ஆதிகாரிகளுக்கு மூளை பாதிப்புகள் இருப்பதாக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் அமெரிக்காவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனம், இந்த மர்ம நோய் நேரடியாக மைக்ரோவேவ் கதிர்வீச்சுடன் தொடர்புடையது என்று கூறியது.
ஹவானா நோய் அறிகுறி என்றால் என்ன?
இந்த நோய் அறிகுறி முதன்முதலில் க்யூபாவில் 2016-17 கால கட்டங்களில் கண்டறியப்பட்டது. இது மர்மமான நோயாகவே கருதப்படுகிறது.
ஹவானாவில் உள்ள அமெரிக்க மற்றும் கனடா ராஜீய அதிகாரிகளுக்கு நிலை தடுமாறுதல், காது கேட்பதில் கோளாறு, மன பதற்றம், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டன.
அதன்பின் க்யூபா 'ஒலி தாக்குதலை' நடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதை க்யூபா மறுத்தது. இந்த சம்பவம் இருநாடுகளுக்கு மத்தியிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஆய்வு ஒன்றில், ஹவானா நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ராஜீய அதிகாரிகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது ஆனால் க்யூபா அந்த ஆய்வை ஏற்க மறுத்துவிட்டது.
கனடாவும் இந்த சம்பவத்திற்கு பிறகு க்யூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தது.
க்யூபாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, 2018ஆம் ஆண்டு சீனாவின் தெற்கு நகரமான குவாங்சூவில் உள்ள ஊழியர்களுக்கு இதேபோன்று அறிகுறிகள் தென்பட்டதால் பல்வேறு அதிகாரிகளை அமெரிக்கா பணியிலிருந்து நீக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்