You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எப்ராஹீம் ரையீசி: இரானின் புதிய அதிபரின் பின்புலம் என்ன? அடுத்த அதி உயர் தலைவர் ஆவாரா எப்ராஹீம் ரையீசி?
இரானில் ஜூன் 18ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டின் நீதித்துறை முன்னாள் தலைவர் எப்ராஹீம் ரையீசி வெற்றிபெறுள்ளார். இதன் மூலம் இரானின் 13ஆவது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.
ஹோஜ்ஜத் அல்-இஸ்லாம் சையத் எப்ராஹீம் ரையீசி 1960ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வடகிழக்கு இரானின் மஷாத்தில் பிறந்தார்.
நவீன இரானின் பழமைவாதிகளில் முக்கியமானவராக அறியப்படும் ரையீசி, மஷாத் நகரில் உள்ள எட்டாவது ஷியா இமாம் ரேஸாவின் புனித ஆலயமும் அந்த நாட்டின் மிகவும் வளமான சமூக அமைப்பான அஸ்தான்-இ-குத்ஸின் புரவலராகவும் இருந்துள்ளார்.
பிபிசி மானிட்டரிங் பிரிவின் செய்தியின்படி, ரையீசி எப்போதும் ஒரு கருப்பு தலைப்பாகை அணிந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இது ஷியா முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது சயீத்தின் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கிறது.
இதுமட்டுமின்றி, இரானில் உட்சபட்ச அதிகாரம் கொண்ட அதி உயர் தலைவர் பதவிக்கு தனக்கு அடுத்த ஒருவரை தெரிவு செய்வதற்கு 82 வயதாகும் ஆயத்துல்லா அலி காமனெயி முன்னுரிமை கொடுத்து வருவதாகவும், இப்ராஹிம் ரையீசியே அவரது தேர்வாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இரானிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை உறுதிசெய்யும் கார்டியன் கவுன்சில், தனது சமீபத்திய நடவடிக்கையின் மூலம், பெரும்பாலான சீர்திருத்த அல்லது மையவாத வேட்பாளர்கள் இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதை தடுத்துள்ளது.
குறிப்பாக, இரானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அலி லாரிஜானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட போதே ரையீசியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இரானின் அதி உயர் தலைவர் காமனெயி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் கார்டியன் குழுவில் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, சவால் அளிக்கக்கூடிய வேட்பாளர்களை நிராகரித்ததன் மூலம் தனது விருப்பத்திற்குரியவருக்கு உதவியதாக பாபி கோஷ் ப்ளூம்பெர்க்கில் வெளியான கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இரானின் அதி உயர் தலைவராவதற்கு முன்பாக இரண்டு முறை நாட்டின் அதிபராக ஆயத்துல்லா அலி காமனெயி பதவி வகித்திருந்தார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் இரானின் அதி உயர் தலைவர் ஆவது என்பது ரையீசிக்கு எளிதான பாதையாக மாறியுள்ளதாக கருதப்படுகிறது.
இதுமட்டுமின்றி, காமனெயியின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கும் ரையீசி, தற்போதைய அதி உயர் தலைவரை போன்றே இஸ்லாமிய நீதி அமைப்பு முறையை முன்னிறுத்தி நாட்டையும் அரசாங்கத்தையும் ஆள்வார் என நம்பப்படுகிறது.
இரானுக்கு அந்நிய முதலீடு தேவையில்லை என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்லக்கூடாது என்றும் ரையீசி நம்புகிறார். எனினும், பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை காமனெயி ஆதரித்தார். இதற்குப் பிறகு ரையீசியும் அதை ஆதரித்தார்.
அதே சூழ்நிலையில், இரானின் அடுத்த அதி உயர் தலைவர் பற்றிய வதந்திகளுக்கு ரையீசி இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இரானில் அதி உயர் தலைவரே நாட்டின் மிகப்பெரிய மத மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டவராக கருதப்படுகிறார். அவர் நாட்டின் ராணுவத் தளபதியாகவும் செயல்படுகிறார்.
இரானின் நீதித் துறையில் ரையீசி பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன், நாட்டின் அதி உயர் தலைவரை தேர்ந்தெடுக்கும் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் இருந்துள்ளார்.
1988ஆம் ஆண்டில் டெஹ்ரான் இஸ்லாமிய புரட்சி நீதிமன்றத்தின் வழக்குரைஞராக ரையீசி பணியாற்றியபோது, அவர் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அந்த ஆணையம் அதிக அளவிலான இடதுசாரி தலைவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் அதிருப்தியாளர்களை தூக்கிலிட உத்தரவிட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரானில் ரையீசியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த இரானிய அதிபர் தேர்தலில் வெறும் 38.5 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று ஹசன் ரூஹானியிடம் ரையீசி தோல்வியுற்றார். எனினும், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை நீதித்துறை தலைவராக அதி உயர் தலைவர் காமனெயி நியமனம் செய்தார்.
அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், ரையீசி உள்பட எட்டு பேர் மீது அமெரிக்க அரசு தடை உத்தரவுகளை பிறப்பித்தது.
இவர்கள் அனைவரும் இரானின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியிக்கு நெருக்கமானவர்கள் என்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் அமெரிக்கா காரணம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கால்நடை திருட்டு சந்தேகம்: திரிபுராவில் மூவர் அடித்துக் கொலை
- பயணத் தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர்
- 14ஆம் நூற்றாண்டில் பெருந்தொற்றின் போது தொலைந்த தங்க நாணயம் கண்டெடுப்பு
- தமிழ்நாட்டில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?
- இரண்டாம் உலகப் போர்: 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :