You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை: 21 பேர் பலி
சீனாவில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய தீவிர வானிலையில் சிக்கி மாரத்தான் போட்டியொன்றில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம் கொண்ட அல்ட்ரா மாரத்தான் போட்டியின்போது அதிவேகமான காற்றுடன் கூடிய உறைபனி மழை பெய்தது.
மோசமான வானிலையில் சிக்கி இந்த போட்டியில் பங்கேற்ற சுமார் 172 வீரர்கள் மாயமானதை அடுத்து, போட்டி நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இந்த அதீத வானிலையில் சிக்கிய பலரும் ஹைப்போதெர்மியா என்னும் திடீர் உடல் வெப்பநிலை குறைவால் பாதிக்கப்பட்டு முடங்கினர்.
மாயமான வீரர்களில் 151 பேர் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள சூழ்நிலையில், அவர்களில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சில போட்டியாளர்கள் வெறும் அரைக் கால் சட்டை மற்றும் டி-ஷர்ட்டுகளையே அணிந்திருந்தனர்.
இது தொடர்பாக பேசிய உயிர் தப்பிய வீரர்கள் சிலர், தாங்கள் போட்டிக்கு செல்வதற்கு முன்பே காற்று வீசவும், மழை பொழியவும் வாய்ப்புள்ளது என்பது தெரியும் என்றும், ஆனால் தாங்கள் அனுபவித்த அளவுக்கு மோசமாக அது இருக்கும் என்று துளிகூட நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சரியாக போட்டி தொடங்கிய மூன்று மணிநேரம் கழித்து, வீரர்கள் ஓடிக்கொண்டிருந்த மலைப்பாங்கான இடத்தில் கடுமையான காற்று வீசிய நிலையில், பிறகு வீசிய ஆலங்கட்டி மழையில் வீரர்கள் சிக்கிக்கொண்டதாகவும், இதைத்தொடர்ந்து அங்கு வெப்பநிலை மிகவும் சரிவடைந்ததாகவும் அருகிலுள்ள பயின் நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த மலைப்பாங்கான இடத்திற்கு அருகே அப்போது ஓடிக்கொண்டிருந்த மாவோ சூஷி என்ற வீராங்கனை இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது, "அப்போது மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளில் சிக்கி ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டவரான இவர், உடனடியாக தனது விடுதிக்கு திரும்பிவிட்டாலும், பல வீரர்கள் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சிக்குண்டனர்.
பெரும்பாலான வீரர்கள் மோசமான வானிலையின் காரணமாக பார்வை புலப்பாடு குறைந்து வழிதவறி சென்றுவிட்டதை அடுத்து 1,200க்கும் மேற்பட்ட மீட்புதவியாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணியில், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு முழுவதும் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை காலை வரை இந்த மீட்புப்பணி தொடர்ந்தாலும், அந்த நேரத்தில் வெப்பநிலை மென்மேலும் குறைந்தது தேடலை கடினமாக்கியதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அதீத வானிலையில் சிக்கி 21 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் சீன மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த போட்டியை சரிவர திட்டமிடாமல் ஒருங்கிணைத்த உள்ளூர் நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பயின் நகரத்தின் மேயர் ஜாங் சுசென், "போட்டியின் அமைப்பாளராக, நாங்கள் குற்ற உணர்ச்சியும் வருத்தமும் நிறைந்தவர்களாக உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பாகிஸ்தான் அணு நிலையத்தை தகர்க்க இஸ்ரேல் இந்தியாவுக்கு உதவ முன்வந்ததா?
- சுந்தர்லால் பகுகுனா: இந்தியர்களுக்கு மரங்களை கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த மனிதர்
- கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா? பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் கேள்வி
- டயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :