You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்வாதி மோகன்: நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் திட்டத்தை வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்காவின் நாசா விண்வெளி முகமை வெற்றிகரமாக தன் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை நேற்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன்.
மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்கிற முக்கிய பொறுப்பை ஸ்வாதி மோகன் தான் ஏற்று வழிநடத்தினார்.
மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, மார்ஸ் 2020 விண்கலத்தை தேவையான இடத்துக்குக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்பு தான்.
குறிப்பாக மார்ஸ் 2020 விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் எல்லைக்குள் நுழையச் செல்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது.
ஸ்வாதி மோகன் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார். வடக்கு வெர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி சி மெட்ரோ பகுதிகளில் தான் வளர்ந்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் எம்.ஐ.டியில் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.
குழந்தை மருத்துவராக வேண்டும் என்றிருந்த விருப்பம்
2013-ம் ஆண்டு முதல் மார்ஸ் 2020 திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். கிட்டத்தட்ட மார்ஸ் 2020 திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அத்திட்டத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கைடன்ஸ் நேவிகேஷன் & கன்ட்ரோல் ஆபரேஷன்ஸ் லீடாக கலிஃபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஜெட் ப்ரொபல்சன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார்.
16 வயது வரை ஸ்வாதி மோகனுக்கு ஒரு நல்ல குழந்தை மருத்துவராக வேண்டும் என்பது தான் விருப்பமாக இருந்தது. இன்னொரு பக்கம் விண்வெளி மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அந்த விருப்பத்தை எப்படி ஒரு வேலையாக மாற்றிக் கொள்வது எனத் தெரியாமல் இருந்தார்.
16 வயதில் தன் முதல் இயற்பியல் வகுப்பை மேற்கொண்டார்.
"எனக்கு இயற்பியலில் எல்லாமே எளிதாக புரிந்தது, நல்ல ஆசிரியர் கிடைத்தது என் அதிர்ஷ்டம். அப்போது தான் பொறியியலை ஒரு வழியாகப் பயன்படுத்தி, விண்வெளி துறையில் பணியாற்றலாம் எனத் தோன்றியது" என நாசாவின் வலைதளத்தில் அவர் குறித்த தகவல்களில் கூறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.
மருத்துவராக விரும்பிய ஸ்வாதிக்கு விண்வெளி மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?
ஸ்வாதி ஒன்பது வயது சிறுமியாக இருக்கும் போது 'ஸ்டார் டிரெக்' என்ற அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியானது. அதில் விரிந்து கிடக்கும் பேரண்டத்தில் புதிய புதிய பகுதிகளைக் கண்டு பிடிப்பார்கள். அதைக் கண்ட போது தான் அவருக்கும் விண்வெளி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
"நானும் அது போல செய்ய விரும்பினேன். இந்த பேரண்டத்தில் புதிய, அழகான இடங்களை கண்டுபிடிக்க விரும்பினேன். இந்த பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளி தனக்குள் நிறைய ஞானத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. நாம் இப்போது தான் அதைக் கற்கத் தொடங்கி இருக்கிறோம்," என நாசா வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்
அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.
ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.
செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.
பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. இந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குள்ளேயே, குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: