You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா, ஜப்பானை வதைக்கும் காட்டுத்தீ, சூறாவளி: கொரோனாவுக்கு நடுவே இன்னொரு போராட்டம் மற்றும் பிற செய்திகள்
கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்கா ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் காட்டுத்தீ மற்றும் சூறாவளியை எதிர்கொள்ளப் போராடி வருகின்றன.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள சூறாவளி 'ஹாஷென்' காரணமாக நூற்றுக்கணக்கான ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூறாவளியின் பாதையில் உள்ள 8 லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜப்பான் பிரதமர் அபே மக்கள் அனைவரையும் கவனமுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் அங்கு 'மாய்சக்' புயல் ஏற்பட்டது. அது இந்தாண்டின் கடுமையான புயலாக கருதப்படுகிறது.
குயிஷு பகுதியில் உள்ள 430,000 வீடுகளுக்கு, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை மூன்று மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு ஊடகம் கூறுகிறது.
ஜப்பான் கடந்து திங்கட்கிழமை தென் கொரியா நோக்கிச் செல்கிறது இந்த சூறாவளி. அந்நாடு இதற்கான முன்னேற்பாடுகளுடன் உள்ளது.
ஜப்பானின் நிலை இதுவென்றால் அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
கலிஃபோர்னியாவின் பிரபலமான நீர்த்தேக்கம் அருகே உள்ள கழிமுக பகுதியில் வெள்ளிக்கிழமை தீ பரவ தொடங்கியது. ஏறத்தாழ 200 பேர் அந்த சுற்றுலா பகுதியில் சிக்கி உள்ளனர். இதுவரை 20 பேர் காயமடைந்துள்ளனர்.
0% தீயே அணைக்கப்பட்டுள்ளது என கலிஃபோர்னியா வன மற்றும் தீயணைப்புத் துறை தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதியிலிருந்து கலிஃபோர்னியாவில் குறைந்து 1000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகம் வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் சந்திக்கும் சிக்கல்கள்
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக், ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கூலித் தொழிலாளியாக பணியாற்றியவர். சமீபகாலமாக கோவையில் வேலை செய்து வந்த இவர், கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்து, அடிப்படை தேவைகளுக்கான பெரும் நெருக்கடிகளை சந்தித்ததால், கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.
"இரண்டு வருடங்களாக கோவையில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனைச் சந்தையில் வேலை செய்து வந்தேன். லாரிகளிலிருந்து பொருட்களை இறக்குவது, குறிப்பிட்ட ஒரு கருவியை தேடிச்சென்று வாங்கிக் கொடுப்பது, கடைகளை சுத்தம் செய்வது, உதிரி பாகங்களை பிரித்து அடுக்குவது போன்ற வேலைகளை செய்து வந்தேன். சனிக்கிழமைகளில் தான் அந்த வாரத்திற்கான சம்பளம் கிடைக்கும். அதை வைத்து எனது செலவுகளையும் சமாளித்து, குடும்பத்துக்கும் பணம் அனுப்புவேன். ஒவ்வொரு மாதமும் நான் அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து எனது குடும்பம் காத்திருக்கும்.
விரிவாகப் படிக்க:வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் தமிழகம் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
கொரோனா வைரஸ் பரிசோதனை: 'இறந்துபோன வைரஸ்களை கணக்கில் காட்டும் பி.சி.ஆர் டெஸ்ட்'
கொரோனா வைரஸை கண்டறிய நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை மிகவும் உணர்திறன் மிக்கது என்றும், அது இறந்த வைரஸ்களையும் கணக்கில் கொள்ள கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஒரு வாரத்திற்கு மட்டுமே இருந்தாலும், அவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்று இருப்பதாக முடிவு வருகிறது.
இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக கணக்கிடப்பட்டு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விரிவாகப் படிக்க:'இறந்துபோன வைரஸ்களை கணக்கில் காட்டும் பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை'
கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது இந்தியா வரும்?
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 2.7 கோடியை நெருங்கி வருகிறது. அந்த வைரஸின் உயிரிழப்பு எண்ணிக்கை, 8.75 லட்சத்தை கடந்துள்ளது.
ஆனால், வைரஸ் பரவல் முதல் முறையாக கண்டறியப்பட்டதாக கருதப்படும் நாள் முதல் இப்போதுவரை வைரஸ் எதிர்ப்பு மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டறியப்படவில்லை. அவை தொடர்பான ஆராய்ச்சிகள் அனைத்தும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, முதல் முறையாக ஸ்பூட்னிக்-V என்ற பெயரில் கோவிட்-19 வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. மருத்துவ அறிவியல் துறையில் மிகப்பெரிய வெற்றியை எட்டியதாக அப்போது அந்நாடு கூறியது.
விரிவாகப் படிக்க:கொரோனா தடுப்பூசி எப்போது இந்தியா வரும்? எவ்வளவு விலை?
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக்கு உதவவில்லையா?
இந்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14ஆம் இடத்தில் உள்ளது.
தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் நீடிக்கிறது. தமிழகத்தில் அரசியல் தலைமை பிரச்சனை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் தருவதில் சிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்டவை காரணமாக தமிழகம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிக்கல் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
விரிவாகப் படிக்க:இந்திய அளவில் 14ஆம் இடம்: தொழில் வளர்ச்சியை இழக்கிறதா தமிழகம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: