You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Facebook: சதிக்கோட்பாடு பரப்பிய 2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கியது ஃபேஸ்புக் மற்றும் பிற செய்திகள்
சதிக்கோட்பாடு ஒன்றை பரப்பி அது பற்றி விவாதித்து வந்த குழுவொன்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
டீப் ஸ்டேட், வணிக மற்றும் ஊடக சக்திகள் தங்களுக்குள் ஒரு ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக செயல்படுகின்றன என்ற ஒரு சதிக் கோட்பாாட்டை நம்பும், அதனை பரப்பும், விவாதிக்கும் ஒரு குழுவுக்குப் பெயர் கியூஅனான் (QAnon) என்பதாகும்.
டீப் ஸ்டேட் என்றால் என்ன?
டீப் ஸ்டேட் என்றால் வெளித் தோற்றத்தில் தெரியும் அரசுக்குள் செயல்படும் அதிகாரம் மிக்க ஒரு சிறு குழுவைக் குறிக்கும். அதிகாரம் மிக்க ஆட்களைக் கொண்ட சிறு வலைப்பின்னலாக செயல்படும் இந்தக் குழு அரசையே ஆட்டிப் படைக்கும் ஒரு அரசாக செயல்படும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. இப்படி ஒரு குழு இருப்பதாக நம்புகிறவர்கள் அதைக் குறிப்பிட ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொல்லே 'டீப் ஸ்டேட்'.
'ஆழ் அரசு' என்று இதனை நேரடியாக மொழி பெயர்த்து ஒரு தமிழ்ச் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இன்னும் பொருத்தமான சொல் ஒன்று வரலாம். சரி மீண்டும் செய்திக்கு வருவோம்.
2 லட்சம் உறுப்பினர்கள்
கியூஅனான் சதிக் கோட்பாட்டைப் பேசும் குழுவினர் ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது ஃபேஸ்புக்கால் தடைசெய்யப்பட்டுள்ள Q/Qanon என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்த குழுவில் சுமார் இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
"எங்கள் சமுதாயக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை தொடர்ந்து பதிவிட்டதற்காக" இந்த குழு அகற்றப்பட்டதாக ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மாதம் கியூஅனானுடன் தொடர்புடைய உள்ளடக்கங்களை ட்விட்டர், டிக்டாக் ஆகிய நிறுவனங்கள் தங்களது தளத்திலிருந்து நீக்கின.
இந்த சதி கோட்பாட்டு குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஆயிரக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மட்டுமின்றி அதன் இணைய முகவரிகளை தடை செய்வதாக ட்விட்டர் அறிவித்தது. அதேபோன்று, கியூஅனான் சம்பந்தப்பட்ட ஹேஷ்டேகுகளை கொண்டு டிக்டாக்கில் காணொளி தேடுதல் மேற்கொள்வதை அந்த நிறுவனம் கட்டுப்படுத்தியது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
எனினும், அதையொத்த பெயரில் இருக்கும் பல ஃபேஸ்புக் குழுக்கள் இன்னமும் செயல்பாட்டிலேயே இருக்கின்றன.
தற்போது ஃபேஸ்புக்கால் நீக்கப்பட்டுள்ள சதிக் கோட்பாட்டு குழுவானது வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைப் பகிர்வது தொடர்பில் எல்லையை "மீறியதாக" என்று ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு "சதி கோட்பாடு சார்ந்த உள்நாட்டு தீவிரவாதிகள்" பற்றிய ஒரு எச்சரிக்கையை எஃப்.பி.ஐ வெளியிட்டிருந்தது. அதில் கியூஅனானை உள்நாட்டு தீவிரவாத அச்சுறுத்தலாக குறிப்பிட்டிருந்தது.
கேரளா விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் இரண்டாகப் பிளந்தது
கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு நிலவரப்படி சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
சென்னை அருகில் அம்மோனியம் நைட்ரேட்: உடனடியாக அகற்ற உத்தரவு
சென்னைக்கு அருகில் பெருமளவு அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக சுங்கத் துறை தெரிவித்த தகவல்களுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன.
விரிவாக படிக்க: சென்னை அருகில் அம்மோனியம் நைட்ரேட்: உடனடியாக அகற்ற உத்தரவிட்டது மாசு கட்டுப்பாட்டு வாரியம்
இலங்கை தேர்தல்: 145 இருக்கைகளுடன் நாடாளுமன்றத்தில் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
இலங்கை நாடாளுமன்றத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி கட்சியாக 128 ஆசனங்களை பெற்றுள்ளது. தேசிய பட்டியல் ஊடாக அந்த கட்சிக்கு மேலும் 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அயோத்தி ராமர் கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோதி நாட்டினார். உணர்ச்சிப்பூர்வமான ஓர் உரையை நிகழ்த்தினார். நாடெங்கிலும் ஓர் உணர்வெழுச்சி இருந்தது என்பது பல்வேறு செய்திகளின்மூலம் தெரிகிறது. ராம ஜென்மபூமி போராட்டம் நிகழ்ந்து வந்த காலத்தில் இதற்கான எதிர்ப்பு இரு தரப்பிலிருந்து வந்தது.
விரிவாக படிக்க: அயோத்தி ராமர் கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: