You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக் டாக்: இந்தியாவிற்கு அடுத்து எந்தெந்த நாடுகள் தடை விதிக்கப்போகின்றன?
நடனமாடி காணொளிப் பதிவு செய்யவும், நகைச்சுவையான வசனங்களுக்கு உதடுகள் அசைத்து காணொளி தயாரிக்கவும் இளைஞர்கள் அதிக அளவில் டக் டாக் செயலியைப் பயன்படுத்திவந்தனர்.
சமீபத்தில் சீனா செயலிகளைத் தடை செய்த இந்திய அரசு டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கும் தடை விதித்தது. தற்போது இந்தியாவைப் போல அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூட டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறது.
யூடியூப்பை போல டிக் டாக்கும் ஓர் இலவச செயலி தான். டிக் டாக்கில் ஒரு நிமிட காணொளியைப் பதிவிடலாம், மேலும் அந்த செயலியில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் பாடல்களை பயன்படுத்தி புதிய காணொளிகளை உருவாக்கலாம்.
திரைப்படங்களின் நகைச்சுவை வசனங்களுக்கும் உதடு அசைத்து காணொளியை உருவாக்க முடியும். ஒரு டிக் டாக் பயன்பாட்டாளர் 1000 பின் தொடர்பாளர்களைப் பெற்ற பிறகு அவர்களுக்கு சில பரிசுகள் வழங்கப்பட்டது. அந்த பரிசுகளைப் பணமாகவும் பயன்பாட்டாளர்கள் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது.
1000 பின் தொடர்பாளர்களைப் பெற்ற பிறகு நேரலையில் தோன்றி தனது ரசிகர்களுடன் உரையாற்றும் சலுகையும் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த செயலியின் மூலம் பயன்பாட்டாளர்கள் குறுஞ்செய்திகள் அனுப்பி உரையாடும் வசதியும் இருந்தது.
2019ம் ஆண்டு அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் டிக் டாக் இடம்பெற்றிருந்தது. கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோதும் டிக் டாக் பயன்பாட்டாளர்கள் அதிகரித்தனர்.
அதே நேரத்தில் மத்திய சீனாவில் டிக் டாக் போல மற்றொரு செயலியான டௌயின் மிக பிரபலமாக இருந்தது. டௌயின் செயலியை உலகம் முழுவதும் உள்ள இரண்டு பில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலியை அன்றாடம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனாக உள்ளது.
டிக் டாக் செயலிக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
டிக் டாக் என்ற செயலி மூன்று வெவ்வேறு செயலிகளாக வெளிவந்தது. முதல் கட்டமாக 2014ம் ஆண்டு அமெரிக்காவில் மியூசிக்கலி என்ற செயலியாக வெளியானது. அதன் பிறகு 2016ம் ஆண்டு சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் டௌயின் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
இதே பைட்டான்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு தனது செயலியை டிக் டாக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு 2018ம் ஆண்டு பைட்டான்ஸ் நிறுவனம் மியூசிக்கலி செயலியை வாங்கி தனக்கு சொந்தமாக்கியது. டிக் டாக் மற்றும் மியூசிக்கலியை இணைத்து ஒன்றாக இயக்க துவங்கியது.
ஆனால் எப்போதுமே டிக் டாக் செயலியை நிர்வகிக்க அதன் தலைமை பொறுப்பில் சீனர்களை அமர்த்த பைட்டான்ஸ் நிறுவனம் தயக்கம் காட்டியது. டிஸ்னியின் மூத்த முன்னாள் நிர்வாகியான கெவின் மேயரை டிக் டாகின் தலைமை நிர்வாகியாக பைட்டான்ஸ் நிறுவனம் நியமித்தது.
டிக் டாக் எவ்வளவு தரவுகளை சேகரிக்கிறது?
டிக் டாக் தனது பயன்பாட்டாளர்களிடம் இருந்து அதிக அளவில் தரவுகளை சேகரிக்கிறது.
- எந்தெந்த காணொளிகளை பயன்பாட்டாளர்கள் பார்க்கின்றனர். எந்த காணொளிகளில் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.
- எந்த இடத்தில் பயன்பாட்டாளர்கள் வசிக்கிறார்கள்.
- பயன்பாட்டாளரின் அலைபேசி விவரங்கள் மற்றும் அதன் மென்பொருள் எவை?
- பயன்பாட்டாளர்கள் தங்கள் அலைபேசியில் தட்டச்சு செய்யும் விதம்.
- மேலும் டிக் டாக் பயன்பாட்டாளர்கள் தங்கள் மொபைலில் எதையெல்லாம் படிக்கிறார்கள், படித்ததில் எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கிறார்கள் என்ற தரவுகளையெல்லாம் டிக் டாக் செயலி சேகரிக்கிறது என்ற செய்தி பலரை அதிர்ச்சி அடைய செய்கிறது.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் எப்படி தரவுகளை சேகரிக்கிறதோ அதே போல தான் டிக் டாக்கும் சேகரிக்கின்றன. இருப்பினும் அமெரிக்காவின் தனியார் தகவல் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று டிக் டாக் செயலி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
டிக் டாக் மூலம் சீனா மக்களை உளவு பார்க்க முடியுமா?
''டிக் டாக் பயன்பாட்டாளர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர். சீனா கம்யூனிஸ்ட் கட்சியிடம் உங்களின் தனிப்பட்ட தரவுகளை கொண்டு சேர்க்கிறீர்கள்'' என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
டிக் டாக் செயலி மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் சீனாவிற்கு வெளியில் தான் சேகரிக்கப்படுகிறது என டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
''எங்களைச் சீன அரசாங்கம் இயக்குகிறது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானது'' என ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் டிக் டாக் பொது கொள்கை பிரிவுக்கான தலைவர் தியோ பெர்ட்ரம் கூறுகிறார்.
சீனா அரசாங்கம் தனது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சேகரித்து வைத்திருக்கும் வெளிநாட்டு தரவுகளை ஒப்படைக்குமாறு பைட்டான்ஸ் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தும் சாத்திய கூறுகள் இருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன.
2017ம் ஆண்டு சீனாவில் நிறைவேற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி, ''எந்த அமைப்பாக இருந்தாலும் தனி மனிதனாக இருந்தாலும் நாட்டின் நலன் கருது சீனாவின் உளவுத்துறைக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்'' என சட்டம் விளக்கம் அளிக்கிறது.
''சீனா அரசாங்கம் டிக் டாக் நிறுவனத்தை அணுகி, வெளிநாட்டினரின் தரவுகளை கேட்டு கோரிக்கை முன்வைத்தால், நாங்கள் நிச்சயம் அந்த கோரிக்கையை நிராகரிப்போம்'' என பெர்ட்ரம் கூறுகிறார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் வெறுப்பை எதிர்கொள்ள பைட்டான்ஸ் நிறுவனம் விரும்பாது.
ஏற்கனவே பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டௌஷியோ என்ற பிரபல செய்தி செயலி, ஆபாச காணொளிகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கடந்த 2017ம் ஆண்டு இந்த செயலி 24 மணி நேரத்திற்குத் தடை செய்யப்பட்டது. எனவே நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து நேரடியாக வரும் உத்தரவுகளை ஏற்க மறுத்தால், குறிப்பிட்ட அந்த நிறுவனமும் நிர்வாகிகளும் பல எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
சீனாவின் கொள்கை பிரச்சாரத்திற்கு டிக் டாக்கை பயன்படுத்த முடியுமா?
உலகிலேயே இணைய சேவைக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதித்த நாடு சீனா. ஏற்கனவே தியானமென் சதுக்க போராட்டங்கள் மற்றும் திபெத் நாட்டின் சுதந்திர கோரிக்கைகள் உள்ளிட்ட காணொளிகளை தடை செய்யவும் பகிரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனிடையே அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்த கூடிய காணொளிகளுக்கும் கருத்துகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என டிக் டாக்கில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் ஒரு சில கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. மேலும் டிக் டாக்கின் தானியங்கி செயல்பாடுகளும் அரசியல் கருத்துகளை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீன மதிப்பீட்டாளர்கள் அனுமதியுடன் வெளிவரும் சில காணொளிகள் சீனா அரசுக்கு சாதகமாக அமையலாம் என்ற விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :