You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிம் ஜாங் உன்: வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை - தென் கொரியா
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வந்த தகவல்களில் எந்த அடிப்படைத்தன்மையும் இல்லை என்றும் தென் கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல், 20 நாட்களுக்கு பொது வெளியில் கிம் வராததை தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்தன.வட கொரியத் தலைவர் கிம்மின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஒருசில ஊடகங்கள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டது.ஆனால், ஒருசில நாட்களுக்கு முன்பு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் நல்ல உடல்நிலையுடன் காணப்பட்டார்.
தென் கொரிய புலனாய்வு அமைப்பு என்ன கூறுகிறது?
புதன்கிழமையன்று தென் கொரிய நாடாளுமன்ற குழுவிடம் பேசியுள்ளார் அந்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் சுன் ஹுன்.
அப்போது வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளில் உண்மை இருப்பதுபோல தெரியவில்லை என்று அவர் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் கூறுகிறது.
மேலும் இந்தாண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 17 முறை கிம் ஜாங் உன் பொது வெளியில் காணப்பட்டதும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த நேரத்திற்கு அவர் 50 முறை வெளியில் காணப்பட்டிருப்பார்.
இதற்கு கொரோனா நோய்த் தொற்று பரவலும் காரணமாக இருக்கலாம் என்று நாடாளுமன்ற கமிட்டியின் ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.
இதுவரை வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று அந்நாடு கூறியிருக்கிறது.
"ஆனால், வட கொரியாவில் தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது" என நாடாளுமன்ற கமிட்டியின் உறுப்பினர் கிம் ப்யுங் கீ கூறுகிறார்.
"ராணுவப்படைகள், கட்சி கூட்டங்கள் போன்ற உள்நாட்டு விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் கிம் ஜாங் உன் கவனம் செலுத்தி வந்தார். கொரோனா தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளதால், அவர் வெளியில் வருவதை குறைத்திருக்கலாம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னணி என்ன?
பல பத்திரிகைகளில் கிம்மின் உடல்நிலை மோசமாக இரு்பபதாக செய்தி வெளியாளது. TMZ என்ற செய்தி நிறுவனம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டது.
கிம்முக்கு சிகிச்சை அளிக்க சீன மருத்துவக்குழு வட கொரியா சென்றதாகவும், அதற்கு முன்பே கிம் இறந்துவிட்டார் என்றும் சீன சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவியது.
அப்போதே தென் கொரிய அரசாங்கமும், சீன புலனாய்வு அமைப்பும், எந்த அசாதாரண சூழலும் வட கொரியாவில் நிலவவில்லை என்றும், கிம் ஜாங் உன் இறக்கவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரான் விமான சேவையால் பரவிய கொரோனா வைரஸ் : பிபிசி ஆய்வு
- தணிகாசலம் கைது - கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தவரை கைது செய்தது போலீஸ்
- முடக்கநிலைக்குப் பிந்தைய வாழ்க்கை - சீன மக்கள் பணிக்கு திரும்பியது எப்படி?
- ஊரடங்கு காலத்தில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன்?