கொரோனா வைரஸ்: உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சீனாவில் கொரோனா தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு இந்த கொரோனா தொற்று பரவியுள்ளது. மொத்தம் 110,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளை தவிர்த்து, சர்வதேச அளவில் நடைபெறும் பயணங்கள், பணிகள், பள்ளிகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் முதல்முறையாக கோவிட் 19 வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் வயது விவரத்தை அந்நாடு வெளியிடவில்லை. இருப்பினும் அவர் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள்.

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த இரண்டு வாரங்களில் மிக குறைந்த எண்ணிக்கையாகும்.

தென் கொரியாவில் இதுவரை 7513 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் இதுவரை 510 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரிட்டனில் 373 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரானில் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை இரானில் 291பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் புதிதாக 881 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இரானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,042ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று அச்சத்தால் கடந்த இரண்டு வாரங்களாக சுமார் 3000 பேர் இரானுடனான பாகிஸ்தான் எல்லையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் தாங்கள் சுகாதாரமற்ற நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாத்ரீகர்கள் ஆவர், இவர்கள் வெறும் கால்களில் இரானிலிருந்து நடந்து வந்தவர்களாவர்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி

கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலி. இந்நாட்டில் 20 பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இத்தாலியில் சில பகுதிகளில் மட்டும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையானது, இப்போது நாடு முழுவதற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. பயணங்கள், பொதுக் கூட்டங்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

சீனாவுக்கு வெளியே அதிகளவில் மரணம் நடந்த நாடாக இத்தாலிதான் உள்ளது. இந்நாட்டில் 366 ஆக இருந்த பலி எண்ணிக்கை திங்கட்கிழமை 463 ஆக உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 24 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் தற்போது 9172 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வுஹான் நகருக்கு சென்ற ஷி ஜின்பிங்

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவிய சீன ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்திற்கு சென்றார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்டோரை சந்திக்கிறார் ஷி ஜின்பிங்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் இப்போது வரை 3,890 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து பதினோராயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு:

  • கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கொரோனா தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட பொது சுகாதாரத்திற்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜஸ்டின் இவ்வாறாகத் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவினாலே 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வு கூறி உள்ளது.
  • சீனாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாடு சுகாதாரத் துறை அளித்த தகவலின்படி சீனாவில் புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கனடாவில் முதல் கொரோனா மரணம் பதிவாகி உள்ளது.
  • பிரான்சில் கலாசார துறை அமைச்சர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 607 ஆக உள்ளது. அங்குமட்டும் 24 பேர் பலியாகி உள்ளனர்.
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா தொடர்பாக பகிர்ந்துள்ள ட்வீட்டில், "கடந்த ஆண்டு சாதாரண காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் 37 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக இதன் காரணமாக 27 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பலியாகின்றனர். எதுவும் முடக்கப்படவில்லை, வழக்கம் போலதான் பொருளாதாரமும் உள்ளது. இப்போது வரை கொரோனாவால் 22 பேர்தான் பலியாகி உள்ளனர். இது குறித்து சிந்தியுங்கள்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட சொகுசு கப்பல், இப்போது ஓக்லாந்து துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 54 நாடுகளை சேர்ந்த 3,500 பேர் உள்ளனர். இந்த கப்பலில் 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • போர்ச்சுகல் அதிபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களை சந்தித்தார். அதில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. அதனை அடுத்து தன்னை சில தினங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: