நைஜீரியா ஆங்கிலம்: ஆக்ஸ்ஃபோர்ட் அங்கீகரித்த புதிய மொழி - சுவாரஸ்ய பகிர்வு மற்றும் பிற செய்திகள்

இஸ்கூல், நடு சென்டர் அறிவீர்களா? - வருகிறது புதிய ஆங்கிலம்

இஸ்கூல், நடு சென்டர் - இப்படியான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்களா?

இவையெல்லாம் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அதாவது ஆங்கிலத்தை தங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துப் பயன்படுத்துவார்கள். சொல்லப்போனால் மொழி அப்படிதான் பகுதிக்கு ஏற்றவாறு உருமாறும். அதுவும் உலகமெங்கும் இணைப்பு மொழியாகப் பேசப்படும் ஆங்கிலம்தான் அதிகம் உருமாறி இருக்கிறது.

குறிப்பாகச் சொல்லப்போனால் அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டன் ஆங்கிலம் என்றே இரு ஆங்கிலங்கள் உண்டு. பிரிட்டனில் colour என்றால் அமெரிக்காவில் Color.

சரி விஷயத்திற்கு வருவோம். சர்வதேச அளவில் பிரபலமான ஆக்ஸ்ஃபோர்ட் கையேடு இப்போது நைஜீரிய ஆங்கில வார்த்தைகளையும் அங்கீகரித்து இருக்கிறது. அதாவது இவை ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தைகள். ஆனால், நைஜீரியாவில் ஆங்கிலம் என்ற பேரில் வழக்கிலிருந்த வார்த்தைகள். Ember Months என்ற வார்த்தை ஆண்டின் முதல் நான்கு மாதத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.

Next tomorrow என்ற வார்த்தை நாளை மறுநாளைக் குறிக்கப் பயன்படுத்துகிறது. இவையெல்லாம் நைஜீரியாவில் மட்டும் பயன்பாட்டிலிருந்த வார்த்தைகள். இப்போது இவற்றுக்கெல்லாம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது ஆக்ஸ்ஃபோர்ட்.

கொரோனா வைரஸ் மரணங்கள்: தென் கொரிய மதத் தலைவர் மீது கொலை வழக்கு விசாரணை

தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் காணாமல் போனோர் விவகாரம்

இலங்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த தனது கணவர் காணாமல் போனது குறித்து உண்மையான விசாரணையை தொடங்க வைப்பதற்கு சந்தியா எக்னெலிகோடாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், முக்கியமான விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதில், நிலைமைகள் மாறும் என்று அவர் உணர்ந்தார்.

அன்வார் கட்சியின் அதிருப்தி தலைவர் தாக்கப்பட்டார்

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்திருப்பது அன்வார் இப்ராகிம் ஆதரவாளர்களுக்கு சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்களில் ஒருதரப்பினர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று இரவு பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய வேர்ப் பாலம்

இயற்கை தந்த பசுமையான உலகத்துக்கு நடுவே மனிதன் உருவாக்கிய நாகரிக உலகம் முழுவதும் சிமெண்டால் ஆனது. பருவநிலை மாற்றமும், புவி வெப்பம் அடைதலும், உலகின் உயிர்ச் சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது இந்த சிமெண்ட். சிமெண்ட் இல்லாமல் எந்தக் கட்டுமானமும், வளர்ச்சியும் சாத்தியமில்லை என்ற பாதையில் இன்றைய உலகம் நடைபோடுகிறது. ஆனால், பரபரப்பான இந்த நாகரிக உலகத்துடன் தொடர்பில்லாமல் ஒதுங்கி வாழும் மேகாலயாவின் பழங்குடிகள் சிமெண்ட்டும், ஜல்லியும், இரும்பும் இல்லாமல் பாலம் கட்டும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி, அதனை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: