மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்: புற்றுநோய், மலாய் பாசம், மகாதீர் மீதான அன்பு - யார் இவர்?

மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

News image

மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின். பெரு நிறுவனங்களின் நிர்வாகி, அமைச்சர், துணைப் பிரதமர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் இவர்.

சிறந்த தேசியவாதி, மலாய் இன பற்றாளர் என மொகிதினை நன்கு அறிந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதே போல் அரசியல் போராட்டங்களில் பங்கேற்கத் தயங்காதவர் என்ற பெயரும் இவருக்குண்டு.

கடந்த இருபது மாதங்களுக்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைத்த போது, மலேசிய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் மொகிதின் யாசின். எனினும் இச்சமயம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பல மாதங்கள் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்று வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். அந்த வகையில் புற்றுநோயை வெற்றி கண்டவர் என்று இவரது ஆதரவாளர்கள் இவரைக் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.

பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றவர்

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள மூவார் நகரில் கடந்த 1947ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பிறந்தவர் மொகிதின் யாசின். அங்கு உள்ளூர் பள்ளியில் படித்தவர், பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் 1971ஆம் ஆண்டு பொருளாதாரத் துறை பட்டப்படிப்பை முடித்தார்.

பின்னர், அரசுப் பணியில் சேர்ந்த மொகிதின், தொடக்கத்தில் பயிற்சி மற்றும் உபகாரச் சம்பளப் பிரிவின் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து மூவார் மாவட்ட உதவி அதிகாரியாக பணியாற்றியவர், ஜோகூர் மாநில பொருளாதார வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அரசு சார் நிறுவனங்களின் பல்வேறு மேலாண்மை பொறுப்புகளை வகித்தவர், பின்னர் அரசியலில் கால்பதித்தார்.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

தமது இளம் வயதிலேயே மலாய்க்காரர்களை பெரும்பான்மையாக பிரதிநிதிக்கும் அம்னோ கட்சியில் இணைந்தார் மொகிதின் யாசின். தொடக்கத்தில் அடிப்படை உறுப்பினராக கட்சியில் இணைந்தவர், பின்னர் இளைஞர் பிரிவின் நிர்வாகியாக ஏற்றம் கண்டார். ஒருகட்டத்தில் மொகிதினின் சுறுசுறுப்பும் கச்சிதமாக செயல்பாடும், கட்சித் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கவர்ந்தது. இதன் எதிரொலியாக ஜோகூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய மொகிதின், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அம்னோவின் பாகோ தொகுதி இளைஞர் பிரிவின் தலைவராகத் தேர்வானார்.

அடுத்த பத்தாண்டுகளில் ஜோகூர் மாநில இளைஞர் தலைவர் ஆனார். பின்னர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், அதையடுத்து ஜோகூர் மாநில அம்னோ தலைவராகவும் பதவி வகித்த அவர், நாளடைவில் அம்மாநில முதல்வராகவும் உயர்வு கண்டார்.

அரசியலில் படிப்படியாக வளர்ச்சி கண்டவர்

மொகிதின் யாசினின் இந்தப் படிப்படியான முன்னேற்றமும், திட்டமிட்ட அரசியல் நகர்வுகளும் நாட்டின் மத்திய அரசியல் களத்துக்கு அவரை அழைத்து வந்தது.

1978ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மொகிதினுக்கு கிடைத்தது. பாகோ தொகுதியில் களமிறங்கிய அவர், வெற்றி கண்டார். இதையடுத்து வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் கூட்டரசு பிரதேச துணை அமைச்சர், வாணிபம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர், உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் துறை துணையமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் மொகிதின் யாசின். மேலும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவராகவும், 1986 முதல் 1995 வரை ஜோகூர் மாநில முதல்வராகவும் (மந்திரி பெசார்) பதவியில் இருந்துள்ளார்.

மாநில முதல்வராக திறம்பட செயலாற்றி வந்த நிலையில், 1995ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேச அரசியல் களத்தில் கால்பதித்தவர், உடனடியாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

இதே வேளையில் கட்சியிலும் மொகிதினின் செல்வாக்கு மெல்ல அதிகரித்து வந்தது. இதன் பலனாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் போட்டியிட்டவர், உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அப்துல்லா அகமட் படாவி தலைமையிலான ஆட்சியில் வேளாண் மற்றும் வேளாண் சார் தொழில்துறை அமைச்சராக 2004 முதல் 2008 வரை செயல்பட்டவர், பின்னர் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இச்சமயம் அம்னோ கட்சியில் மொகிதினின் செல்வாக்கு மளமளவென ஏற்றம் கண்டது. இதையடுத்து 2008ஆம் ஆண்டு அம்னோ துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் எதிரொலியாக, அடுத்த ஆண்டு பிரதமர் நஜீப்பின் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இக்காலகட்டத்தில் தான் மலேசிய பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை பயிற்றுவிக்கும் மொழியாக மலாய் மொழி மட்டுமே இருக்க முடியும் என்று உத்தரவிட்டார் மொகிதின். அதுவரை இப்பாடங்கள் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இது சில தரப்பினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

2015ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. குறிப்பாக '1 MDB' ஊழல் தொடர்பான விவரங்கள் வெளியாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இதையடுத்து துணைப் பிரதமராக பொறுப்பு வகித்த மொகிதின், ஊழல் குறித்து சில கேள்விகளை எழுப்பினார்.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் நஜீப் அதிரடி நடவடிக்கையாக மொகிதினை பதவியில் இருந்து நீக்கினார். பின்னர் 2016ஆம் ஆண்டு அம்னோ கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதனால் அரசியல் பயணத்தில் தமது அடுத்தக்கட்டப் போராட்டத்தை துவங்கிய மொகிதின், சில மாதங்களில் ப்ரீபூமி பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்தார்.

கட்சிப் பதவிக்காக மொகிதின் எதிர்கொண்ட போராட்டங்கள்

இன்று நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மொகிதின் யாசினுக்கு எதுவும் சுலபத்தில் கைகூடவில்லை. பல்வேறு அரசியல் போராட்டங்களை வெற்றிகரமாக கடந்துவந்த பிறகே அடுத்தடுத்த ஏற்றங்களை அவர் சந்தித்துள்ளார்.

1984ஆம் ஆண்டு அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட போது தோற்கடிக்கப்பட்டார் மொகிதின். பின்னர் 1990ஆம் ஆண்டு அம்னோ உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட போதும் அவருக்கு தோல்வியே காத்திருந்தது. எனினும் துவங்கிவிடாமல் அடுத்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் கட்சித் தேர்தலில் போட்டியிட்ட போது வெற்றியை ருசிக்க முடிந்தது.

1993இல் வெற்றி எனில், 1996இல் மீண்டும் தோல்வி, 2000ஆம் ஆண்டில் அடுத்த வெற்றி என்று தமது அரசியல் பயணத்தில் வெற்றி தோல்விகளை மாறிமாறி எதிர்கொண்டவர் மொகிதின் யாசின். முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், நஜீப் ரசாக் அம்னோ தலைவராகவும், மொகிதின் யாசின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

மகாதீர் ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட மொகிதின்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொண்ட போதிலும், மகாதீர் மொஹம்மத்தின் தீவிர ஆதரவாளராக அடையாளம் காணப்பட்டதால், மொகிதின் யாசின் வெற்றி பெற முடிந்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

அச்சமயம் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அப்துல்லா படாவிக்கு கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவரும் கூட மகாதீரின் ஆதரவாளராகவே அடையாளம் காணப்பட்டவர். 1998இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் சிறைக்குச் சென்ற பின்னர், அப்துல்லா படாவியை துணைப் பிரதமராக நியமித்தார் மகாதீர். அவர் பதவி விலகிய பின்னர் படாவி பிரதமர் ஆனார்.

எனினும் பின்னாட்களில் அவர் மகாதீரின் அதிருப்தியை சம்பாதித்தார். அதே வேளையில் பிரதமர், கட்சித் தலைவர் என்ற வகையில் அம்னோவில் இயல்பாகவே படாவியின் கை ஓங்கியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு மொகிதின் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக இரண்டு வலுவான வேட்பாளர்கள் களமிறங்கினர்.

அவர்களில் ஒருவர் மாநில முதல்வர், மற்றொருவர் மத்திய துணை அமைச்சர். எனினும் தம்மை மகாதீரின் ஆதரவாளராக வெளிப்படுத்திக் கொள்ள மொகிதின் தயங்கவில்லை. இதன் பலனாக அவருக்கு கட்சித் தேர்தலில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு துணைப் பிரதமராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

அன்று மகாதீரின் ஆதரவாளர் என்ற முத்திரையுடன் அம்னோ கட்சியின் இரண்டாவது உயர் பதவியை எட்டிப்பிடிக்க முடிந்த மொகிதின், இன்று அதே மகாதீருக்கு எதிராக அணிதிரட்டி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

மலேசிய குடிமகன் என்பதைவிட மலாய் மொழிக்குத் தான் முன்னுரிமை அளிப்பேன்

2010ஆம் ஆண்டு மலாய் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து மொகிதின் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அச்சமயம் மலேசிய பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை பயிற்றுவிக்கும் மொழியாக மலாய் மொழி மட்டுமே இருக்க முடியும் என்று உத்தரவிட்டார் மொகிதின். அதுவரை இப்பாடங்கள் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இது சில தரப்பினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

இதனால் மலேசிய குடிமகன் என்பதைவிட மலாய் மொழிக்குத் தான் முன்னுரிமை என்று பகிரங்கமாக அறிவிக்க இயலுமா என்று எதிர்த்தரப்பினர் சவால் விடுத்த போது, அவ்வாறே துணிச்சலுடன் அறிவித்தார் மொகிதின்.

இது போன்று அறிவிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை என்றும், மற்ற இனத்தவர்களும் தாங்கள் மலேசியக் குடிமக்கள் என்பதை விட, தங்கள் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிப்போம் என்று அறிவித்தால் அதில் குற்றம் காண முடியாது என்றும் மொகிதின் விளக்கம் அளித்தார்.

மலாய் உரிமைக்குழு போன்று இந்தியர்களும் சீனர்களும் தங்களுக்கான குழுக்களை தோற்றுவிக்கலாம் என்றார் மொகிதின். எனினும் இந்தக் கருத்து மலேசிய அரசு செயல்படுத்தி வரும் 'ஒரே மலேசியா' கோட்பாட்டுக்கு எதிரானது என்று ஒருதரப்பினர் அவரை விமர்சித்தனர்.

ஊழல் குறித்து கேள்வி கேட்டதால் பதவியை இழந்தார்

2015ஆம் ஆண்டு 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானதை அடுத்து மலேசிய அரசியல் களத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை நோக்கி பல்வேறு கேள்விகளைத் தொடுத்தன.

இந்நிலையில் துணைப் பிரதமரான மொகிதின் யாசினும் தன் பங்குக்கு அதிருப்தியை வெளியிட்டார். இந்த ஊழல் விவகாரத்தை அன்றைய பிரதமர் நஜீப் கையாளும் விதம் குறித்து அவர் குறை கூறினார்.

இதையடுத்து 2015 ஜூலை 28ஆம் தேதி தனது அமைச்சரவையை மாற்றியமைத்த போது மொகிதினை துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் பிரதமர் நஜீப். இதற்கு அவர் கூறிய காரணத்தை மொகிதின் ஏற்கவில்லை. எனினும் அம்னோ கட்சியின் துணைத் தலைவராக அவர் பதவியில் நீடித்தார். அதே வேளையில் கட்சியின் செயல்பாடுகளையும் அவர் விமர்சிக்கத் தொடங்கியதை அடுத்து, 2016 ஜூன் மாதம் கட்சிப் பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கியது அம்னோ உச்சமன்றம்.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

தாம் எந்தவொரு கட்டத்திலும் கட்சியின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை, கட்சிக்கு துரோகம் செய்ததில்லை என்று குறிப்பிட்ட மொகிதின், இத்தகைய நடவடிக்கைகளால் தாம் குரல் கொடுப்பதை தடுத்துவிட இயலாது என்றார்.

இதையடுத்து தமது அரசியல் பயணத்தைத் தொடர 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிபூமி பெர்சாத்து மலேசியா என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார் மொகிதின். இந்தக் கட்சியில் பின்னர் மகாதீர் மொஹம்மதும் அவரது மகன் முக்ரிஸ் மொஹம்மதும் இணைந்தனர்.

இது பூமிபுத்திரர்களான மலாய்க்காரர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் நலன்களை முன்னிறுத்திச் செயல்படும் கட்சியாக அறிவிக்கப்பட்டது. இதில் மற்ற இனத்தவர்கள் சேர இயலாது.

தற்போது இந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் மகாதீர் மொஹம்மத். எனினும் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து தமது ராஜினாமா அறிவிப்பை மீட்டுக் கொள்வதாக அவர் அறிவித்தார். ஆனால் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் காரணமாக மகாதீர் கட்சிக்குள் திரும்ப வருவதை மொகிதின் தரப்பு விரும்பவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மொகிதின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புற்றுநோயுடன் போராடிய மொகிதின் யாசின்

மலேசிய வரலாற்றில் முக்கியப் பதிவாக இடம்பெற்றுள்ள 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் மொகிதின். அப்போது அவருக்கு கணையப் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதற்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புற்றுநோயை வென்ற மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

அச்சமயம் அவரது கணையத்தில் இருந்த புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு கீமோதெரப்பி சிகிச்சை பெற்றார் மொகிதின். தொடர்ந்து ஆறு மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அவரால் அமைச்சுப் பணிகளில் கவனம் செலுத்த முடியுமா எனும் கேள்வி ஒருதரப்பால் எழுப்பப்பட்டது.

அதற்கு புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கட்டி அகற்றப்பட்ட பிறகும் இது போன்ற சிகிச்சை நீடிப்பது வழக்கமான ஒன்று என்று விளக்கம் அளித்தார். அப்போது ஒருமாத மருத்துவ விடுப்பில் மொகிதின் சென்ற போது அவர் பொறுப்பேற்றிருந்த உள்துறை அமைச்சின் பணிகளை பிரதமர் மகாதீர் கூடுதலாக கவனித்தார்.

இன்று வரலாற்றின் அடுத்தடுத்தப் பக்கங்கள் புரட்டப்பட்ட நிலையில், மகாதீர் வகித்து வந்த பிரதமர் பொறுப்புக்கு மொகிதின் ஏற்றுள்ளார்.

புற்றுநோயை வெற்றிகண்ட மொகிதின் யாசின், தற்போது அரசியல் களத்திலும் தனது அடுத்த வெற்றியைப் பதிவு செய்து மலேசியாவின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: