You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல” - மற்றும் பிற செய்திகள்
இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சோந்தவர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தொழிற்துறை மண்டலம் ஒன்றில், கண்டெய்னர் லாரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று கருதப்பட்டது.
"இப்போது இதில் இறந்தவர்கள் குறித்து முழு விபரங்களை பெற, பிரிட்டனுக்கும், வியட்நாம் அரசுக்கும் இடையே தொலைபேசி வழியாக நேரடித் தொடர்பு ஏற்பட்டுள்ளது" என்று எஸ்ஸெக்ஸ் காவல்துறை கூறியுள்ளது.
இவ்வாறு இறந்தோரில் தங்களின் உறவினர்கள் இருக்கலாம் என அஞ்சி பல வியட்நாம் குடும்பங்கள் தாங்களே முன்வந்து தகவலை தெரிவித்திருந்தன.
செவ்வாய்கிழமை தனது குடும்பத்திற்கு அனுப்பிய செய்தி ஒன்றில் வெளிநாடு செல்லும் தனது முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக 26 வயதான ஃபாம் தி திரா மை தெரிவித்திருந்தார்.
இந்த 31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்களின் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
"இறந்தவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள் என்று நம்புகிறோம். அந்நாட்டு அரசோடு நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம்" என்று துணை தலைமை காவலர் டிம் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.
இறந்தவர்களை அடையாளம் காணும் நிலையில் காவல்துறையினர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் லண்டனிலுள்ள வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களை தனிப்பட்ட முறையில் இன்னும் அடையாளம் காண வேண்டியுள்ளது என்றும், இதனை வியட்நாம் மற்றும் பிரிட்டனிலுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர் என்றும் வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இறந்தோரின் உறவினர்கள் யாராவது இறந்த தங்களின் உறவினரின் சடலத்தை தாயகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென விரும்பினால், அந்த குடும்பங்களுக்கு வியட்நாம் மற்றும் பிரிட்டனிலுள்ள தொடர்புடைய துறை அதிகாரிகளோடு ஒத்துழைத்து உதவத் தயாராக இருப்பதாகவும் லண்டனிலுள்ள வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம்: அதீத விவசாயத்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் அழிந்து போகும் பேராபத்து
ஜெர்மனி முழுவதும் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் பூச்சிகள் மற்றும் சிலந்திகள் அழிந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த அழிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள், இது அதிகளவிலான விவசாயத்தால் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பட்டாம் பூச்சிகள், ஊரும் பூச்சிகள் மற்றும் பறக்கும் பூச்சிகளின் வாழ்விடங்களைக் காப்பாற்ற மனிதர்கள் நிலங்களை பயன்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என விஞ்ஞானிகள் கோருகின்றனர்.
வாட்ஸ்ஆப்: உங்கள் செய்தியை கண்காணிக்க இந்திய அரசு விரும்புவது ஏன்?
சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறுஞ் செய்திகளை கண்காணித்து , இடைமறித்து படிக்கும் இந்தியாவின் திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்படவுள்ளதால் பயன்பாட்டாளர்களும் அந்தரங்க உரிமைக்கான செயல்பாட்டாளர்களும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.
பல்வேறு துறைகளை சார்ந்த அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் இது சிக்கலாக அமைத்துள்ளது.
இந்திய தகவல் தொழில் நுட்பதுறை ஜனவரி 2020ம் ஆண்டிற்குள் சமூக ஊடகங்களில் செய்திகளை அனுப்புதல் மற்றும் பகிர்தல் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிடவுள்ளது. பல வகையான இணைய வர்த்தகம் மற்றும் வலைத்தளங்களும், செயலிகள் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும்.
விரிவாக வாசிக்க: இந்திய அரசு உங்கள் வாட்ஸ்ஆப் செய்தியை கண்காணிக்க விரும்புவது ஏன்?
அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது?
சில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அணு உலையை இயக்கும் இந்திய அணு மின்சாரக் கழகமும் (என்பிசிஐஎல்) சில கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது. உண்மையில் இந்த அபாயம் எவ்வளவு பெரியது?
இந்திய அளவில் மதிக்கப்படும் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளரான புக்ராஜ் சிங் அக்டோபர் 28ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல் ஒன்றை வெளியிட்டார். இந்தத் தாக்குதலைத் தான் கண்டுபிடிக்கவில்லையென்றும் வேறொருவர் கண்டுபிடித்துத் தனக்குத் தெரிவித்ததாகவும் தான் அரசிடம் தெரிவித்ததாகவும் அடுத்தடுத்த ட்விட்டர் செய்திகளில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அம்மாதிரி தாக்குதல் நடைபெறவில்லையென மறுக்கப்பட்டிருந்தது.
விரிவாக வாசிக்க: அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது?
ஓட்ஸி: 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது?
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதன் கடைசியாகப் பயணித்த பாதையை, அவரை சுற்றி பனியில் உறைந்திருந்த தாவரங்களின் மூலம் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கு வழியான மலைத்தொடரில் பனி மனிதர் ஓட்ஸி ஏறியுள்ளார் என்ற முடிவுக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 3,210 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைகளுக்கு நடுவில் 1991ம் ஆண்டு இந்த பனிமனிதனின் உடல் மலையேறுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
விரிவாக வாசிக்க: 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்