You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் பற்றி பேசினால் மலேசிய பிரதமருக்கு உள்நாட்டில் ஆதாயம் கிடைக்குமா?
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக, மலேசியாவில் இருந்து
காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றியபோது தெரிவித்த கருத்து இந்திய - மலேசிய உறவில் விரிசலை உண்டாக்கியது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐநாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகள் இடையே இருக்கும் நட்புறவைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா எதிர்வினையாற்றியது.
எனினும் காஷ்மீர் குறித்த தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்கிறார் பிரதமர் மகாதீர்.
"மலேசியர்கள் தங்கள் நாட்டுக்கு வெளியே நடக்கும் ஒரு பிரச்சனை குறித்துக் கவலைப்படுகிறார்கள் என்றால் அது இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த பிரச்சனை மட்டும்தான்," என்கிறார் மலேசிய அரசியல் விமர்சகர் முத்தரசன்.
அங்கு யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருவதால், பாலஸ்தீன அகதிகள் குறித்த அக்கறையும், ஆதரவும் மலேசிய முஸ்லிம்களிடம் எப்போதுமே உண்டு என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"மக்களின் இந்த ஆதரவை மலேசியத் தலைவர்களும் பிரதிபலித்துள்ளனர். மலேசியாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள அம்னோ, பாஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
"அண்மையில் ரோஹிஞ்சா அகதிகள் விவகாரம் குறித்து மலேசியாவில் பேசப்பட்டது என்றால், அதற்கு ஆசியான் வட்டாரத்தில் உள்ள, அண்டை நாடான மியன்மரில் நிகழும் பிரச்சனை என்பதுதான். அந்த அடிப்படையில்தான் அது மலேசியர்களின் கவனத்தைச் சற்றே ஈர்த்தது.
"இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை மலேசியர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் இதுநாள் வரை கவலைப்பட்டதோ, ஏதேனும் ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவித்ததோ இல்லை. அதை இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகவும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஒரு போராட்டமாகவே கருதுகிறார்கள்.
"மலேசிய இஸ்லாமியர்கள், குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு காஷ்மீர் விவகாரத்தின் அரசியல் பின்னணி குறித்து ஏதும் தெரிந்திருக்காது. அவர்களைப் பொறுத்தவரை அது சம்பந்தமில்லாத ஒரு விஷயம்."
"பிரதமர் மகாதீர் காஷ்மீர் விவகாரத்தைக் கையிலெடுத்துப் பேசுவதால், அவருக்கு மலேசிய முஸ்லிம்களிடம் ஆதரவு கிடைத்துவிடாது. மேலும், அவ்வாறு ஆதரிப்பதும் தவறு, ஆதரவு கிடைக்கும் என நினைப்பதும் தவறு."
"இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் மகாதீருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. மேலும், 22 ஆண்டுகள் நீடித்த தமது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் மகாதீர் நெருக்கமான உறவைப் பேணவில்லை. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருப்பார், அவ்வளவுதான்."
"பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான அபிமானம் காரணமாக,அவர் அளித்த தகவல்களின் அடிப்பையில் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு முடிவெடுத்து தனது கருத்தை மகாதீர் வெளிப்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. எனவே அரசியல் லாபம் கருதி அவர் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாகக் கருத இயலாது."
"மலேசியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு காஷ்மீர் விவகாரத்தின் முக்கியத்துவமோ, வீரியமோ தெரியாது. அதை வைத்து ஆதாயம் காண வாய்ப்பில்லை."
"இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்த தமது நிலைப்பாட்டை பிரதமர் அண்மையில் திருத்திக் கொண்டார் என்பதை விட திரித்துவிட்டார் என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் அவரது அனுபவ அறிவும் சாமர்த்தியமும் நன்றாகத் தெரிகிறது."
"கடைசியாக அவர் அளித்த அறிக்கையில், "நான் ஐ.நா. பேரவையின் தீர்மானம் குறித்து மட்டுமே பேசினேன். அத்தீர்மானத்தை பின்பற்றுங்கள் என்றேன். அவ்வாறு செய்யவில்லை எனில் ஐ.நா., என்ற அமைப்பு எதற்காக உள்ளது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்."
"அதாவது இந்தியா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதை முன்னிலைப்படுத்தாமல், ஐநா சபையின் தீர்மானம் சம்பந்தப்பட்டது என காஷ்மீர் விவகாரத்தை மாற்றிக் குறிப்பிட்டுள்ளார்."
"எனவே தவறான தகவல்கள் அல்லது புரிதலின் அடிப்படையில் பிரதமர் மகாதீர் காஷ்மீர் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. மேலும், தாம் இதை கவுரவப் பிரச்சனையாகக் கருதி தாம் ஏற்கெனவே குறிப்பிட்டதை திரும்பப் பெறுவதில் அவருக்கு விருப்பமின்றிப் போயிருக்கலாம். எனவேதான் ஐ.நா பேரவையின் தீர்மானம் என்று தாம் ஏற்கெனவே கூறிய கருத்தை சற்றே திரித்துள்ளார் எனக் கருதுகிறேன்."
"அதேசமயம் காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் ஐநாவில் உரையாற்றிய போது அது பாமாயில் ஏற்றுமதி, வணிகத் தடை என்கிற அளவுக்குப் பெரிதாகும் என அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை."
"அதனால்தான், பிரதமர் மகாதீரின் ஊடகச் செயலாளர்கூட அண்மையில் பாமாயில் ஏற்றுமதி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "இது வணிகப் போருக்கான காலகட்டம் அல்ல," என்று கூறியுள்ளார்," என அரசியல் விமர்சகர் முத்தரசன் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்