You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"குர்துகளின் தலைகளை நசுக்குவோம்" - துருக்கி அதிபர் எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்
வடக்கு சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து வெளியேறாவிட்டால், குர்து போராளிகளின் "தலைகளை நசுக்குவோம்" என்று துருக்கியின் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குர்துகள் வடக்கு சிரியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பின்வாங்கும் வகையில், ஐந்து நாட்களுக்கு தாக்குதலை இடைநிறுத்தும் உடன்படிக்கைக்கு கடந்த வியாழக்கிழமை துருக்கி ஒப்புக்கொண்டது.
ஆனால், நேற்று (சனிக்கிழமை) போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரண்டு தரப்பினரும் ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.
குர்து போராளிகளை பயங்கரவாதிகளாக கருதும் துருக்கி, சிரியாவுக்குள்ளேயே 'பாதுகாப்பு மண்டலம்' ஒன்றை உருவாக்குவதற்கு விரும்புகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று வரும் செவ்வாய்கிழமைக்குள் குர்துகள் அந்த குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறவில்லை என்றால், "நாங்கள் விட்ட இடத்தில் இருந்து தாக்குதலை ஆரம்பித்து, பயங்கரவாதிகளின் தலைகளை தொடர்ந்து நசுக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
கனடாவில் மீண்டும் பிரதமராவாரா ஜஸ்டின் ட்ரூடோ? - தமிழர்களின் ஆதரவு யாருக்கு?
கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
கனடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள், அனல் பரந்த விவாதங்கள், அதிர்வலைகளை எழுப்பிய குற்றச்சாட்டுகள், பகிரங்க மன்னிப்புகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என வழக்கம்போல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது தேர்தல் களம்.
இந்நிலையில், கனடா தேர்தல் களத்தின் தற்போதைய நிலவரம் என்ன? தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கப்போகும் விடயங்கள் என்னென்ன? கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன? கூட்டணி ஆட்சி அமையுமா? தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.
"மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?"
மலேசியாவில் ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பொய்யான செய்திகள், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கட்சி மீது பழிசுமத்தப்படுவதாகச் சாடி உள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல், விடுதலைப் புலிகள் ஆகிய சர்வதேச சதிகாரர்களுடன் ஜனநாயக செயல் கட்சிக்கும் தொடர்புள்ளது என்று மலேசிய எதிர்க்கட்சியான 'பாஸ்' (PAS) தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை உதவித் தொகையாக அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்படியானால் நஜிப்பும் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என்று தமது சமூக வலைத்தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
விரிவாக படிக்க:"மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மூத்த அரசியல் தலைவர் கேள்வி
தலையில் அட்டைப்பெட்டி அணிந்து கொண்டு தேர்வு எழுத நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள்
கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, அவர்களது தலையில் அட்டைப் பெட்டிகளை போட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இது எதற்கு தெரியுமா? ஒரு மாணவர், மற்றவரை பார்த்து எழுதக்கூடாது என்பதற்காக.
இந்த செயலுக்காக அந்த மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மாவட்ட உயர் அதிகாரியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹவேரி நகரத்தில் உள்ள பகத் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வுத்தாளை பார்த்து மட்டுமே எழுத முடியும் என்கிற மாதிரி அந்த அட்டைப்பெட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் தமிழ் பள்ளிப் பெயர்கள் மாற்றம்
ஊவா மாகாணத்தில் பல்வேறு விதமான பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், முதற்கட்டமாக 140 பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்