You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொனால்டு டிரம்ப்: தேர்தல் விளம்பரத்திற்காக வாரம் $1 மில்லியன் செலவிடுகிறாரா?
- எழுதியவர், ரியாலிட்டி செக் அணி
- பதவி, பிபிசி
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படும் போட்டியில் முன்னணியிலுள்ள ஒருவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அளவுக்கு அதிகமான பணத்தை சமூக ஊடக விளம்பரங்களில் செலவிட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூற்று: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, ஃபேஸ்புக்கில் பிரசாரம் செய்வதற்காக மட்டும் டிரம்ப், வாரத்துக்கு ஒரு மில்லியன் டாலர் செலவிடுகிறார் - செனட்டர் எலிசபெத் வாரென்.
தீர்ப்பு: இந்தக் கூற்று உண்மையானதே. கடந்த மாதம் முழுவதும், ஒவ்வொரு வாரமும் தேர்தல் பிரசாரம் குறித்த விளம்பரத்திற்காக மட்டும் டிரம்ப் ஒரு மில்லியன் டாலர் செலவிட்டார். ஆனால், அந்தத் தொகை கடந்த வாரத்திலிருந்து குறைய தொடங்கியுள்ளது.
அதே சமயத்தில், ஜனநாயக கட்சியின் போட்டி வேட்பாளர்களிலேயே அதிகபட்சமாக, கோடீஸ்வரரான டாம் ஸ்டெயர், கடந்த ஒரு மாதத்தில் டிரம்ப் செலவிட்டதில் வெறும் கால் பங்கை மட்டுமே விளம்பரத்திற்காக செலுத்தியுள்ளார்.
போலிச் செய்திகளை கொண்ட விளம்பரங்களை ஃபேஸ்புக் அனுமதிப்பதாகவும் செனட்டர் வாரென் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பக்கத்தில் இருக்கும் பெரும்பாலான விளம்பரங்கள் அவர் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
விளம்பரத்தில் வெளிப்படைத்தன்மை
தங்களது சமூக ஊடகத்தில் பதிவிடப்படும் அனைத்து விதமான விளம்பரங்கள் குறித்த தகவல்களையும் சமீப காலமாக ஃபேஸ்புக் பொதுவெளியில் வழங்கி வருகிறது.
ஃபேஸ்புக்கில் செய்யப்படும் விளம்பரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் விளம்பர பகுதியை பார்ப்பதன் மூலம், ஒரு விளம்பரத்திற்கு யார் பணம் செலுத்தினார்கள், எந்தப் பக்கம் பணம் செலவழித்தது, மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் எத்தனை விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை காணலாம்.
கடந்த 30 நாட்களில், மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் (மாகா) என்ற குழு, டொனால்டு டிரம்பின் பக்கத்தில் விளம்பரங்களுக்காக 42.4 மில்லியனையும், துணை அதிபர் மைக் பென்ஸின் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு 31.3 மில்லியனையும் செலுத்தியுள்ளது.
இதே காலகட்டத்தில், டிஜேடிபி எனும் மற்றொரு குழு, டிரம்பின் ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக கூடுதலாக 5,88,000 டாலர்களை செலுத்தியுள்ளது.
மேற்காணும் இரண்டு தொகையையும் கூட்டும்போது, கடந்த மாதத்தில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொகை டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் சார்பில் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த தொகையை நான்காக பிரித்தோமென்றால் வாரத்திற்கு ஒரு மில்லியன் வருகிறது. அதையே செனட்டர் வாரென் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவையனைத்தும் டிரம்ப் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா ?
டி.ஜே.டி.பி மற்றும் டிரம்ப் மாகா ஆகிய இரண்டின் விளம்பர செலவும் டிரம்பின் பிரசார செலவாகவே கருதப்படும் என்று கூறுகின்றனர் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
"நாங்கள் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை, அதன் பயனர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்கிறோம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இந்த விளம்பரங்கள் டிரம்ப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கருதுகிறோம்."
ஜனநாயக கட்சியின் நிலை என்ன?
அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராவதற்கு போட்டியிடுபவர்களில், ஒருவர் மற்ற அனைவரையும் விட அதிகமாக சமூக ஊடகங்களில் விளம்பரத்திற்காக செலவிடுகிறார்.
இந்த வாரம் நடைபெற்ற விவாதத்தின் மூலம் முதல் முறையாக இந்த போட்டியில் பங்கேற்ற கோடீஸ்வரரான டாம் ஸ்டெயர், கடந்த மாதம் மட்டும் சமூக ஊடக விளம்பரத்தில் 1.5 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார்.
அதற்கடுத்தடுத்த இடங்களை பீட் பட்டிகீக், எலிசபெத் வாரென், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் பிடித்துள்ளனர்.
அரசியல் விளம்பரங்களை ஆராய்கிறதா ஃபேஸ்புக்?
ஃபேஸ்புக்கில் போலியான செய்திகளை கொண்டுள்ள விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு காண்பிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் வாரென் தனக்குத்தானே போலியான தகவலை கொண்ட விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் பதிப்பித்து தனது குற்றச்சாட்டை விளக்கியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்கு கோரிக்கை விடுக்கும் அரசியல்வாதிகளின் பதிவுகளை "மூன்றாம் தரப்பு உண்மை கண்டறியும் குழுக்களிடம்" கொடுத்து தாங்கள் சரிபார்ப்பதில்லை என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
"அரசியல் விவாதங்களை மேற்பார்வை செய்வதும், ஒரு அரசியல்வாதியின் பேச்சு அதன் பார்வையாளர்களை அடைவதைத் தடுப்பதும்" ஃபேஸ்புக்கின் பணி அல்ல என்றும் அவர் கூறினார்.
பிறசெய்திகள்:
- "மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மூத்த அரசியல் தலைவர் கேள்வி
- சிங்களத்திற்கு பதிலாக தமிழ்: இலங்கையில் தமிழ் பள்ளிப் பெயர்கள் மாற்றம்
- குர்துகள் மீதான தாக்குதல்: டொனால்ட் டிரம்பை கடுமையாகச் சாடும் குடியரசு கட்சியினர்
- ரஷ்யா மீண்டும் வல்லரசாக உருவெடுத்துள்ளதா? அமெரிக்காவின் நிலை இனி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்