You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை” - நிதிச்சுமையில் தத்தளிப்பதாக கவலை தெரிவித்த அன்டோன்யு குட்டாரெஷ்
ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து செயல்பட போதுமான பணம் இல்லை என அதன் செயலாளர் அன்டோன்யு குட்டாரெஷ் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அண்டானியோ குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கடந்த பத்து ஆண்டுகளில் மோசமான பணத்தட்டுப்பாட்டை ஐ.நா சந்தித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணம் கையிருப்பு செலவாகிவிடும். இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
193 நாடுகளில் 129 நாடுகள் ஐ.நாவுக்கு தரவேண்டிய பணத்தைத் தந்துவிட்டது, எஞ்சிய நாடுகள் உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா தொடர்ந்து இயங்க வேண்டுமானால், இது மட்டுமே ஒரே வழி எனக் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு நிதி தேவை?
"2019ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டுத் தேவைக்கான நிதியில் 70 சதவீதத்தை மட்டுமே ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தந்துள்ளன. அக்டோபர் 8ஆம் தேதி வரை அவை 1.99 பில்லியன் டாலர்கள் தொகையைக் கொடுத்துள்ளன. அவை கொடுக்க வேண்டிய எஞ்சியதொகை 1.3 பில்லியன்" என்கிறார் ஐ.நா செய்தித் தொடர்பாளர்.
முடிந்தவரைச் சமாளித்துவிட்டோம். ஆனால் இனியும் முடியாது. தேவையான பணம் வரவில்லை என்றால் எங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாதென அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் செலவுகளைச் சர்வதேச அளவில் கட்டுப்படுத்தியிருக்காவிட்டால், நிதிப்பற்றாக்குறை 600 மில்லியன் டாலர்களை எட்டியிருக்கும். மேலும் கடந்த மாதத்தில் நடந்த ஐ.நா. பொது விவாதத்துக்கும், உயர் அளவு கூட்டங்களுக்கும் தேவையான கையிருப்பு இல்லாமல் போயிருக்கும் என்கிறார் அவர்.
இது முதல் முறையல்ல
இவ்வாறு நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டும் ஐ.நா நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அன்டோன்யு குட்டாரெஷ்
கடந்த ஆண்டும் கடிதம் எழுதினார்.
உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உரிய காலத்தில் செலுத்தவில்லை என்பதால் சபையின் முக்கிய நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
Mahabalipuram-ல் சந்திக்கும் India & China பிக்பாஸ்கள் - உச்சக்கட்ட பாதுகாப்பு பணியில் போலீஸார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்