அமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு:கடற்கரை முழுவதும் எண்ணெய் மற்றும் பிற செய்திகள்

பிரேசில் நாட்டில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு, கடற்கரை முழுவதும் எண்ணெய்

பிரேசில் வட கிழக்கு கடற்கரையில் பெரிய அளவில் எண்ணெய் சிந்தி உள்ளதை அடுத்து இது தொடர்பாக விசாரணையை அந்நாடு முடுக்கி உள்ளது. அந்த எண்ணெய்யைப் பரிசோதித்ததில் இவை அந்நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மீன்களுக்கு இவை சேதம் உண்டாக்கியதா எனத் தரவுகள் இல்லை. ஆனால், இப்போது வரை ஆறு கடல் ஆமைகள் மற்றும் ஒரு கடற்பறவை இறந்துள்ளது.

எண்ணெய் கொட்டிய பகுதிகளில் துப்புரவு பணிகள் தொடங்கி உள்ளன. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ரியோ கிராண்டி டூ நோர்டி மாகாணத்தில் நிலைமை சீராக உள்ளதாகவும், அமேசான் மழைக் காடு அமைந்துள்ள மரேனோ பகுதியிலும் இந்த எண்ணெய் சிந்தி உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வில் தமிழ் நீக்கப்பட்டது உண்மையா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் இரண்டு பணிகளுக்கான முதனிலைத் தேர்வில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், தமிழ் அறிந்தவர்களே தேர்வாகவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இரண்டு வகையில் நடத்தப்படுகிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு இன்றியும் சில தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வுகளுடனும் குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தனித் தனியே தேர்வுகள் நடத்தப்பட்டன.

விமானப் பயணத்தில் குழந்தைகளின் குறும்பில் இருந்து தப்பிக்க உதவும் நிறுவனம்

நெடுந்தூர விமானப் பயணங்களின்போது இளம் குழந்தைகள் தங்கள் அருகே அமர்ந்து பயணிப்பதை சில பயணிகள் விரும்ப மாட்டார்கள். காரணம், அந்தக் குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலோ, அழத் தொடங்கிவிட்டாலோ அதை அவர்கள் தொந்தரவாகக் கருதலாம். இத்தகைய பயணிகள் மனம் மகிழும் வகையில் ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது 'ஜப்பான் ஏர்லைன்ஸ்' விமானப் போக்குவரத்து நிறுவனம்.

தமிழர்கள் நிறைந்த இந்திய சர்ஃபிங் அணி - இலங்கையில் சர்ஃபிங் போட்டி

சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது.

செளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்: ஏமன் போர் - விரிவான தகவல்கள்

பெரும் எண்ணிக்கையிலான செளதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். செளதி ஏமன் எல்லையில் நடந்த பெரும் தாக்குதலை அடுத்து ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து இந்த தகவல் வந்துள்ளது. நஜ்ரான் எனும் செளதி நகரத்தின் அருகே செளதி அரேபிய படைகள் சரண் அடைந்ததாக பிபிசியிடம் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான செளதி படைகளை தாங்கள் பிடித்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.

Yemen Civil War - உயிர் பிழைக்க தினந்தோறும் போராடும் மக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :