ஏரியா 51: வேற்று கிரகவாசிகளை காண லட்சக்கணக்கானோர் குவிந்தார்களா? மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திலுள்ள "ஏரியா 51" எனும் இடத்தில் வேற்று கிரகவாசிகள் உள்ளதாகவும், அதை காண விரும்புபவர்கள் வரவேற்கப்படுவதாகவும் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை ஏற்று நேற்று (வெள்ளிக்கிழமை) லட்சக்கணக்கனோர் அப்பகுதியில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 75 பேர் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் விமானப்படை தளம் அமைந்துள்ள இந்த பகுதியில் வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் காணப்படுவதாக பல தசாப்தங்களாக கட்டுக்கதைகள் கூறப்பட்டு வருகின்றன.

அதிகபட்ச பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள தங்களது தளத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று அமெரிக்க விமானப்படை அறிவுறுத்தியுள்ள நிலையிலும், செப்டம்பர் 20ஆம் தேதி (நேற்று) பெரிய எண்ணிக்கையிலான மக்கள் இந்த பகுதியில் கூடுவதற்கான பிரசாரம் ஃபேஸ்புக்கில் முன்னெடுக்கப்பட்டது.

இறுதியில் நேற்று இந்த பகுதியில் வித்தியாசமான ஆடைகளுடன் கூடிய 75 பேர் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

இந்திய விடுதலைக்கு முன்பாக அலெக்ஸாண்டர் ரீயா மதுரைக்கு அருகில் உள்ள பரவை, அனுப்பானடி பகுதிகளில் அகழ்வாய்வு நடத்தினார். 1976ல் டி. கல்லுப்பட்டியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல், அழகன் குளம், மாங்குளம் பகுதிகளில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியத் தொல்லியல் துறை வைகை நதிக்கரையின் இரு பக்கங்களிலும் உள்ள 293 இடங்களில் கள ஆய்வு நடத்தி, பெருங்கற்காலத் தாழிகள், கல்வெட்டுகள், பண்டைய வாழ்விடப் பகுதிகள் கண்டறிந்தது. இதில் ஒரு இடம்தான் கீழடி.

டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா?

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள்.

மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின.

அதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம்.

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

காப்பான்: சினிமா விமர்சனம்

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது.

கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் படம்.

இதயக்கனி படத்தில் தேயிலைத் தோட்ட முதலாளியாக வந்து பாட்டெல்லாம் பாடுவார் எம்..ஜி.ஆர். பிறகு பார்த்தால் அவர் ஒரு ரகசிய போலீஸாக இருப்பார். அது யாருக்குமே தெரியாது. இந்தப் படமும் அந்த பாணியில்தான் துவங்குகிறது. ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொள்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :