You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலுவலக பயணத்தில் உடலுறவின்போது இறந்த ஊழியர் - நிறுவனம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
அலுவலக பயணத்தின் போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அலுவலர் இறந்ததற்கு பிரெஞ்சு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
இறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது.
ஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரெஞ்சு சட்டம் என்று நீதிபதிகள் கூறினர்.
சேவியர் எக்ஸ் என்ற அந்த அலுவலர் டி.எஸ்.ஓ. என்ற பாரிஸைச் சேர்ந்த ரயில்வே சேவைகள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
2013ல் மத்திய பிரான்ஸ் பகுதிக்கு அலுவலக பயணம் சென்றிருந்தபோது, ஒரு விடுதியில் அவர் மரணம் அடைந்தார். ``முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதால்'' ஏற்பட்ட சம்பவம் என்று அவருடைய நிறுவனம் கூறியது.
பணியிட விபத்தாக கருதி அவருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று அரசு சுகாதாரக் காப்பீட்டு நிறுவனம் அளித்த முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
உடலுறவு செயல்பாடு என்பது இயல்பானது, ``குளிப்பது அல்லது உணவு சாப்பிடுவதைப் போன்றது'' என்று காப்பீட்டு நிறுவனம் கூறியது.
இந்தக் கருத்தை பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
அலுவல் காரணமாக பயணம் மேற்கொண்டிருக்கும் ஓர் அலுவலர், ``பயண காலம் முழுவதற்கும்'' சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், சமூகப் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெறுகிறார் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்