You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெதர்லாந்து - நாடெங்கும் 4 மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு - ஹேக்கிங் செய்யப்பட்டதா? மற்றும் பிற செய்திகள்
'தொலைத்தொடர்பு துண்டிப்பு'
நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏதோவொரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் முற்றாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது. அதன் பிறகு இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால், நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அந்நிறுவனத்தினர்.
தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் போலீஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர தேவைக்கு தொலைத்தொடர்பை சார்ந்து இருக்காமல் நேரடியாக காவல் நிலையம், மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர் அதிகாரிகள்.
'குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தவிக்கும் பெற்றோர்'
சென்னையின் மென்பொருள் பூங்கா வளாகங்கள் அமைந்துள்ள சாலையின் முடிவில் தெரிகிறது செம்மஞ்சேரி. கடந்த வாரம் ஐந்து நாட்களாக செம்மஞ்சேரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
செம்மஞ்சேரியில் வசிக்கும் பலரும், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை இந்த ஆண்டு சந்திப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் தண்ணீர் சேகரிப்பதில் தங்களது நாளை தொடங்குகிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிந்தது.
இளம் வயது தாயான சங்கீதா (28) தனது இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்ட பல இடங்களுக்கும் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டியிருந்தது.
'குழந்தைகளைக் கொல்வது எது? - மூளை அழற்சியா அல்லது நிர்வாகத்தின் அலட்சியமா?'
இரவு 8 மணி. முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குப்பையின் நாற்றம், வியர்வை, பினாயில் மற்றும் சடலங்களின் வாடைகள் நிரம்பியிருக்கிறது. மருத்துவமனையின் முதலாவது மாடியில் ஐ.சி.யூ. வார்டுக்கு வெளியே செருப்புகள் கழற்றிவிடப் பட்டிருந்த இடத்தின் அருகே நான் நின்று, கண்ணாடிக் கதவு வழியே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பகல் நேரத்தில் 45 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்தால் தகித்துப் போன அந்த நகரம், இரவிலும் கூட தகிப்புடன் தான் உள்ளது. ஏறத்தாழ பத்து நிமிட இடைவெளிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குழப்பங்கள் நிறைந்துள்ளது. திடீரென வார்டின் உள்ளே இருந்து அலறல் சப்தத்தைக் கேட்டேன்.
நான் உள்ளே பார்த்தபோது, ஒரு படுக்கையின் மூலையில் அமர்ந்திருந்த ஒரு பெண், விம்மி அழுது கொண்டிருந்தார். அவருடைய பெயர் சுதா, வயது 27.
அடுத்த விநாடி அவர் தரையில் விழுந்து அழுது புரண்டார். அவருடைய மூன்று வயது மகன் ரோஹித் படுக்கையின் மீது உயிரற்றுக் கிடந்தான். தீவிர மூளை அழற்சி சிண்ட்ரோம் (AES) நோயின் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் தன் மகனை அவர் இழந்துவிட்டார்.
'முஸ்லிம் இளைஞர் ஜார்கண்டில் அடித்துக் கொலை - பின்னணி தகவல்கள்'
"அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதையுமே எடுக்காத போலீசார், எனது கணவரை திருடன் என்று முத்திரைக் குத்தி சிறைக்கு அனுப்பி விட்டார்கள். அவருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனால்தான் அவர் இறந்து விட்டார்"
விரிவாகப் படிக்க: கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் - பின்னணி தகவல்கள்
'புவி வெப்பமயமாதல்: தண்ணீர் பிரச்சனையும் வியக்க வைக்கும் மாற்று வீடுகளும்'
புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்.
முதல் இரண்டு இடத்தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான். பிபிஎல் நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல். குறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.
விரிவாகப் படிக்க: புவி வெப்பமயமாதலுக்கு நம் வீடும் ஒரு காரணம் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்