You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியா: “போரை விரும்பவில்லை. ஆனால், அபாயங்களை எதிர்கொள்ள அஞ்ச மாட்டோம்” மற்றும் பிற செய்திகள்
"போரை விரும்பவில்லை. ஆனால், அபாயங்களை எதிர்கொள்ள அஞ்ச மாட்டோம்"
ஓமன் வளைகுடாவில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் தாக்கப்பட்டதற்கு இரானை குற்றஞ்சாட்டி உள்ளது செளதி அரேபியா. செளதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்," என்று அரேபியா முழுவதும் வெளிவரும் நாளிதழான அஷார்க் அல்- அவ்ஸாத்திடம் கூறி உள்ளார்.
முன்னதாக, ஓமன் வளைகுடாவில் எண்ணை டாங்கர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இரான் கூறியிருந்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து இருந்தார்.
ஹாங்காங்: மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது அரசு
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். முன்னதாக, ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்தும்கூட மசோதாவை ரத்து செய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
"எங்கள் நடவடிக்கையில் இருந்த குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள் சர்ச்சைகளை தூண்டிவிட்டதற்கு நான் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்."இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சீனாவின் செல்வாக்கு அதிகமாகிவிடும் என்று போராட்டக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இதுகுறித்து நிதானமாக யோசிக்கும் என்று லாம் மேலும் கூறினார்.
இலங்கை தாக்குதல்: முஸ்லிம் கைதிகளை பார்வையிட வரிசையில் காத்திருந்த உறவுகள்
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இருந்தமை தெரியவந்தது.
விரிவாகப் படிக்க:முஸ்லிம் கைதிகளை பார்வையிட வரிசையில் காத்திருந்த உறவுகள்
குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை - மகன் உள்ளிட்ட 7 பேர் பலி
குஜராத்தின் தப்ஹோய் பகுதியில், ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாயில் வெளியேறிய வாயு ஒன்றினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் உயிரிழந்தனர்.
இந்த ஏழு பேரில் மூன்று பேர் துப்புறவு பணியாளர்கள். மேலும் ஓட்டுநர் ஒருவரும், சம்பவம் நிகழ்ந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்த மூன்று பேரும் இறந்ததாக துணை ஆய்வாளர் கே.எம் வகேலா தெரிவித்தார். கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கும்போது துப்புரவு பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்லவில்லை என்று பிபிசி குஜராத்தியிடம் பேசிய அவர் கூறினார்.
விரிவாகப் படிக்க:கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை - மகன் உள்ளிட்ட 7 பேர் பலி
சந்திரயான் - 2: இந்தியாவின் கனவு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய பெண்கள்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஜூலை 15 ஆம் தேதி காலை 02.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான் - 2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்ப உள்ளது. இதற்கு முன்பு, அக்டோபர் 2008ல், சந்திரயான்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது.
சந்திரயான் - 2 செயற்கைக்கோளின் மொத்த கமாண்ட்களும் இரண்டு பெண்களின் கையில் இருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்