மலேரியா கொசுக்களை கூண்டோடு அழிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி மற்றும் பிற செய்திகள்

சிலந்திக்கே உரித்தான ஒருவித நஞ்சை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூஞ்சையை வெளியிட வைத்து மலேரியாவை பரப்பும் கொசுக்களை பெருமளவில் அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்கிருந்த மலேரியா கொசுக்களின் எண்ணிக்கை 45 நாட்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.

கொசுக்களின் இனத்தையே அழிப்பது தங்களது நோக்கமில்லை என்றும், மலேரியாவின் பரவலை தடுப்பதில் பங்கெடுக்கவே விரும்புவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

பெண் கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தை குடிப்பதன் மூலம் பரவும் மலேரியாவினால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 4,00,000 பேர் உயிரிழக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவினால் உலகம் முழுவதும் 219 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமரானார்

நரேந்திர மோதி உள்பட 25 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

பிரதமர் உள்பட இந்தியாவின் மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 58ஆக உள்ளது.

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஸ்மிரிதி இரானி, ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜாவடேகர் ஆகிய மூவரும் இந்த முறையும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட ஊரின் தற்போதைய நிலை

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல அமைதியின்மை சம்பவங்கள் ஏற்பட்டிருந்தன.

குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இவ்வாறான அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

குறிப்பாக முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் உள்ளிட்ட அவர்களின் சொத்துக்களுக்கு பெரியளவில் சேதம் விளைவிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

நரேந்திர மோதியுடன் நடந்த திருமணம்: பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட யசோதாபென்

அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி 2014 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த படிவத்தில், தன்னை திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டு, மனைவியின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

2002, 2007 மற்றும் 2012 என மூன்று முறை முதல்வராக இருந்தபோதும், தேர்தல் வேட்புமனுக்களில் திருமணம் குறித்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த மோதி, 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இந்தத் தகவலை அளித்தபோது, உலகிற்கு அறிமுகமானவர்தான் யசோதாபென்.

1952ஆம் ஆண்டு, வடக்கு குஜராத்தின் பிரம்மவாடா பகுதியில் பிறந்த யசோதாபென், 1968ஆம் ஆண்டு, நரேந்திர மோதியை திருமணம் செய்தார்.

குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய நேசமணி

இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கு பல போராட்டங்கள் நடத்தி 1956ம் ஆண்டு நவம்பர் முதலாம் தேதி குமரி, தமிழ்நாட்டோடு இணைக்கப்படுவதற்கு தலையேற்று பாடுபட்டவர்தான் நேசமணி.

தாயின் ஊரான கல்குளம் தாலுகாவை சேர்ந்த மாறாங்கோணத்தில், அப்பல்லோஸ், ஞானம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 1895ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மார்சல் நேசமணி பிறந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகாவில் பள்ளியாடியில் வளர்ந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :