You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை' - வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ மற்றும் பிற செய்திகள்
இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.
வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருள் - தடுப்பது எப்படி?
வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதல் ``தேர்ந்தெடுக்கப்பட்ட சில'' பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், ``இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்'' இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தடுப்பதற்கான மென்பொருள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
அம்பேத்கரின் சிலையை பாஜகவினர் உடைத்தார்களா? #BBCFactcheck
அம்பேத்கரின் சிலை ஒன்று இடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வெளிவந்த காணொளியொன்று சமூகவலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
''பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை பாஜக அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினருமா கர்னி சிங் உடைக்கிறார். இப்போது மோதி என்ன சொல்லப் போகிறார்? இந்த காணொளியை உங்களால் முடிந்தளவுக்கு வைரலாக்குங்கள், அப்போதுதான் மொத்த இந்தியாவும் இதை பார்க்கும்'' என்ற வாசகத்துடன் இந்த காணொளி பகிரப்பட்டது.
இந்த காணொளி போலியான கூற்றுகளுடன் பகிரப்பட்டுள்ளதாக பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு கண்டறிந்துள்ளது.
விரிவாக படிக்க: அம்பேத்கரின் சிலையை பாஜகவினர் உடைத்தார்களா?
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை
இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் குண்டுதாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் காரணமாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேர நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்தனர்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளில் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா - கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக, மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
அமித் ஷாவின் கொல்கத்தா பேரணியில் வன்முறை, தடியடி
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணிக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினர் அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டினர். மேலும், அவர் சென்ற வாகனத்தின் மீது இந்த மாணவர்கள் கற்களை எறிந்ததாக குற்றஞ்சாட்டப்படுவதோடு, "கோ பேக் அமித் ஷா" என்று முழக்கமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினருக்கும், அமித் ஷாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதால், மாறி மாறி கற்களையும், பாட்டில்களையும் எறிந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்