You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் இந்து பெண்களின் கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் புதிய திருப்பம்
பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக சொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு குறித்த விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வந்தது.
ஆனால், புதிய திருப்பமாக இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும், தாங்கள் தாங்களாகவே இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசு நிறுவனங்களும், ஊடகங்களும் தங்களை தொந்தரவு செய்வதாகவும், அத்தகைய செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட இருவரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில்புகார் அளித்துள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் ஃபார்ஹான் ராஃபி கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இரு பெண்கள் நீதிமன்றத்தில் கோரினர். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் துணை ஆணையிரிடம் அப்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டது.
மேலும் அவர்கள் துணை ஆணையரின் அனுமதி இல்லாமல் இஸ்லாமாபாத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும், அப்பெண்களின் கணவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியுள்ளது.
அந்த பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் பாகிஸ்தான் அரசமைப்பின்படி தாங்கள் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் அதையே தாங்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தின் தலைமை நீதிபதி, சிலர் பாகிஸ்தானின் பெயரை கெடுக்க நினைப்பதாகவும், ஆனால் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அதிக உரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியா இதனை மறுத்துள்ளது. அந்த பெண்களுக்கு 13 மற்றும் 15 வயதே ஆகிறது என்றும் அவர்கள் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
"இந்த இளம் பெண்கள் தாங்களாகவே மதமாற்றம் மற்றும் திருமணம் குறித்து முடிவெடுத்திருக்க முடியாது என்பதை பாகிஸ்தான் பிரதமரும் ஒப்புக் கொள்வார்" என்றும் சுஷ்மா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்களின் தந்தை என்ன சொல்கிறார்?
பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தை அந்த பெண்கள் இருவரும் 18 வயதுகுட்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகிறது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அந்த பெண்களின் தந்தை கூறுவது போலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களின் வலம் வந்து கொண்டிருக்கிறது.
"என்ன நடக்கிறது என்று எனக்கு யாரும் சொல்லவில்லை. என்னை அவர்களை சந்திக்கவிடவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.
தந்தையின் இந்த வீடியோவை தவிர்த்து, "திருமணத்துக்கு பிறகு தங்களை தொடர்ந்து அடிக்கின்றனர்" என்று அந்த பெண்கள் இருவரும் கூறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த வீடியோ குறித்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் எதுவும் பேசப்படவில்லை. பிபிசியால் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சோதிக்க முடியவில்லை.
பாகிஸ்தானில் உள்ள இந்திய ஆணையிரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் டிவீட்டில், "இது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம். இது மோதியின் இந்தியா அல்ல அங்குதான் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர்.இது இம்ரான்கானின் புதிய பாகிஸ்தான். பாகிஸ்தான் கொடியில் உள்ள வெள்ளை நிறம் அனைவருக்கும் பொதுவானது." என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பஃஹத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
’இது முதல்முறையல்ல’
பாகிஸ்தானில் இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பது முதல்முறையல்ல.
எனவே பாகிஸ்தானில் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மெஹ்டி ஹாசனிடம் கேட்டபோது, "பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு. எனவே மதம்சார்ந்த நாடால் பூரணமாக ஜனநாயக நாடாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாட்டின் மதம் அல்லாத மக்கள் இயல்பாக இரண்டாம் குடிமக்களாகதான் நடந்தப்படுவர்" என்று அவர் தெரிவித்தார்.
"பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சிறுபான்மையினருக்கு சம உரிமையை வழங்குகிறது ஆனால் மதம் சார்ந்த சிந்தனையால் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்