You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு - மற்றும் பிற செய்திகள்
சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது.
அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரிகளில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதால் இதை 'பிராமிக்கதக்க' கண்டுபிடிப்பு என்று புதை படிவவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குயிங்ஜியாங் பயோடா என அறியப்படும் இந்த புதை படிவங்கள், சீனாவின் ஹூபி மாகாணத்திலுள்ள டான்ஷூய் ஆற்றின் அருகே சேகரிக்கப்பட்டன.
டான்ஷூய் ஆற்றங்கரையில் 20,000க்கும் மேற்பட்ட படிவங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிவங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புதைபடிவங்கள் பெரும்பாலும் மென்தோல் உயிரிகளுடையவை என்பதால் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ராபர்ட் கெயின்ஸ் பிபிசி-க்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை
இந்தியாவின் தனியார் விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பான வளர்ச்சியுடன் இயங்கி வந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஆனால், அந்நிறுவனத்தின் சமீபத்திய வீழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவின் விமான போக்குவரத்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணத்தை தொடங்கியபோதே சந்தையை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தது. உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை பரந்து விரிந்துள்ள அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவைகளுக்கே சவால் விடும் வகையில் உலக தரம் வாய்ந்த பயண அனுபவத்தை இந்நிறுவனம் வழங்கியது என்று கூறலாம்.
கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, படிப்படியாக, அதே சமயத்தில் சீரான வளர்ச்சியை கண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் சர்வதேச விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நிறுவனம் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் இன்று செயல்பட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.
விரிவாக படிக்க:ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை
ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி
ஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், ஜானி பேரிஸ்டோவும் 100 ரன்களை எடுத்தனர்.
டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தமிழக வீரர் விஜய சங்கர் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது.
182 ரன்களை இலக்காக கொண்டு நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் களமிறங்கினர். ஏழு ரன்களில் அவுட் ஆனார் கிறிஸ் லின். அவரை தொடர்ந்து ராபின் உத்தப்பா களமிறங்கி 35 ரன்களை குவித்தார்.
19.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
விரிவாக படிக்க:ஐபிஎல் போட்டிகள்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி
சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில் ஒருவராகிய ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. எட்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் இருந்தது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின்படி, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. முன்னாள் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன் போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி தரப்பட்ட முடிவு காங்கிரஸ் கட்சியினரிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரிவாக படிக்க:சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி
ஹெரோயினுடன் பயணித்த படகுடன் 9 இரானியர்கள் கைது
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இரானுக்கு சொந்தமான படகொன்றுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் இன்று காலை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
கைப்பற்றப்பட்ட படகிலிருந்து சுமார் 107 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
போலீஸ் விசேட அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து இந்த சுற்றி வளைப்பை முன்னெடுத்தனர்.
விரிவாக படிக்க:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்