நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்க பாகிஸ்தானில் தேவாலயம் எரிக்கப்பட்டதா? #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலுள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில், பாகிஸ்தானில் இஸ்லாமியவாதிகள் தேவாலயம் ஒன்றைத் தீயிட்டு கொளுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவி வருகிறது.

வெள்ளையின மேலாதிக்கவாத ஆஸ்திரேலியர் ஒருவர் இரண்டு மசூதிகளில் தொழுகை செய்த 50 முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றதோடு, அந்த கொடூரத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பினார்.

இதற்குப் பதிலாக நடத்தப்பட்டதாக கூறி பகிரப்படும் 'தேவாலய எரிப்புக் காணொளி'யில் முக்கிய கட்டடத்தில் சிலர் ஏறுவது தெரிவதோடு, காணெளியின் முடிவில் கிறிஸ்தவ அடையாளப் பொருளொன்றை அவர்கள் உடைப்பதும் தெரிகிறது.

மக்கள் கத்துவதையும் இந்த காணொயில் கேட்க முடிகிறது. இதன் ஒரு பகுதியில். இந்த தேவாலயத்தை சுற்றி புகையையும் காண முடிகிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இது பகிரப்படும் நிலையில், பிபிசியின் வாட்ஸாப் வாசகர்கள், இந்த காணொளியின் உண்மை தன்மையை கண்டறிய அதனை எமக்கு அனுப்பியுள்ளனர்.

பிபிசி இது பற்றி ஏன் செய்தி வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள லண்டனிலுள்ள ட்விட்டர் பயனர் ஒருவர் ("@TheaDickinson,") இந்த காணொளியையும் அனுப்பியுள்ளார்.

ஆனால், நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில், பாகிஸ்தானில் தேவாலயம் கொளுத்தப்பட்டதாக பரவி வரும் செய்தி பொய் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

காணொளி பாகிஸ்தானை சேர்ந்தது அல்ல

நியூசிலாந்தில் தாக்குதல் நடைபெற்ற அல் நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். 50க்கு மேலானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை "பயங்கரவாத தாக்குதல்" என்று தெரிவித்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டர்ன், நாட்டிற்கு இதுவொரு "கறுப்பு தினம்" என்று கூறியுள்ளார்.

அதிகமானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலுக்கு பழிவாங்கப்பட்டதாக கூறி, அதற்கு சான்றாக 30 வினாடிகளே இருக்கும் இந்த 'தேவாலய எரிப்பு' காணொளி பகிரப்படுகிறது.

ஆனால், இந்த காணொளி தோன்றிய இடத்தை தேடியதில் இது பாகிஸ்தானை சேர்ந்ததல்ல. எகிப்தை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த காணொளி 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய காணொளி ஏழு நிமிடங்கள் இருக்கும் கீழ்காணும் உண்மையான காணொளியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

காப்டிக் தேவாலயங்களில் தாக்குதல்

எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை தோன்றியபோது, தீ வைத்து எரித்தோரால் எகிப்து முழுவதும் குறைந்தது 25 தேவாலயங்கள் தாக்கப்பட்ட, 2013 ஆகஸ்ட் மாதம் இந்த காணொளி எடுக்கப்பட்டது.

2013ம் ஆண்டு இந்த காப்டிக் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம் தாக்குதலுள்ளானது. சுமார் கிபி 50ம் ஆண்டு அலெக்ஸாண்டிரியாவில் நிறுவப்பட்ட கிறிஸ்தவ மதத்தின் மிக பழமையான தேவாலயங்களில் இது ஒன்றாகும்.

ஆனால், 2013ம் ஆண்டு தொடக்கத்தில் அதிபர் முகமது மோர்சியும், அவரது முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் அதிகாரத்தில் இருந்து ராணுவத்தால் அகற்றப்பட்ட பின்னர், இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஓரளவு காரணம் எனக்கூறி எகிப்திலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்கு வைத்து இஸ்லாமியவாத கடும்போக்காளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஜெனரல் சிசியால் வழங்கப்பட்ட எகிப்தின் வழிகாட்டுதல் சிறந்த ஒன்று என்று காப்டிக் போப் தெரிவித்தார்.

இந்த கூற்றுக்காக பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட நிலையில், போப்புக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

எகிப்திய கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் முற்கால எகிப்தியர்களின் வழித்தோன்றலான காப்டிக் பிரிவினர் ஆவர்.

எகிப்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள். சுன்னி முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த எகிப்தில் பல நூற்றாண்டுகளான கிறிஸ்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :