You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டிஷ் பெண் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய கதை மற்றும் பிற செய்திகள்
இங்கிலாந்தின் சிறியதொரு நகரத்தில் பிறந்த ஃபிரீடா பேடியின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. தனது இளவயதிலேயே இந்தியாவால் கவரப்பட்ட ஃபிரீடா, இந்தியாவிற்கு வந்து பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார் என்று கூறுகிறார் அவரது சுயசரிதையை எழுதிய ஆண்ட்ரூ வைட்ஹெட்.
"நான் அனுபவித்த நாடு, இனம், நிறம் தொடர்பான பிரச்சனைகளை விட மிகவும் ஆழமான விஷயங்களும் உள்ளன. அதில் காதலும் ஒன்று" என்பது ஃபிரீடாவின் வரிகள்.
பல்வேறு சிரமங்களை மீறி, இந்தியாவிற்கு வந்து, அதன் சுதந்திரத்திற்காக போராடியதுடன், இந்தியாவில் சீக்கியர் ஒருவரையும் திருமணம் செய்துகொண்டார் ஃபிரீடா.
பிற்காலத்தில் தமது கணவரானவரை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தார் அவர். இந்தியாவில் நடக்கும் சுதந்திர போராட்டம் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தில் நடக்கும் வாராந்திர இந்திய மாணவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஃபிரீடா வருகை தர தொடங்கியவுடன், அவர்களுக்கிடையேயான நட்பு ஆழமாகத் தொடங்கியது.
விரிவாகப் படிக்க:The British woman who fought for India's freedom
இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் சட்ட விரோதமாக குடியேற முயற்சி
போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.
இவ்வாறு செல்லும் பலர் இலங்கையில் கைது செய்யப்படுவது மட்டுமன்றி, இலங்கை கடல் எல்லையை தாண்டி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றடைந்த பலரும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், சட்ட விரோதமான முறையில் அகதிகளாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்பகுதி கடற்பரப்பில் நேற்று அதிகாலை கடற்படையினரால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
நரேந்திர மோதிக்கு பாகிஸ்தான் உடனான மோதல் தேர்தலில் பலனளிக்குமா?
அரசியல்வாதி உண்மையைச் சொல்லும்போது நம்ப முடியாததாக இருக்கிறது என அமெரிக்க அரசியல் ஊடகவியலாளர் கின்ஸ்லே கூறியிருக்கிறார்.
கடந்த வாரம், இந்தியாவை ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி சரியாக இதைத்தான் செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் நடத்திய விமான தாக்குதல்களால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில், கர்நாடகாவில் தங்கள் கட்சிக்கு 22 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ள கருத்துகள், நேர்மையானவை என்ற நிலையில் குறிப்பிடத்தக்கவை.
எதிர்க்கட்சிகள் உடனடியாக இதைப் பிரச்சனை ஆக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், அணு ஆயுதம் உள்ள இரு நாடுகளுக்கு இடையில் பிரதமர் நரேந்திர மோதியின் கட்சி பதற்றத்தை அதிகரிக்க முயற்சி செய்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக இது இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
விரிவாக படிக்க: பாகிஸ்தான் உடனான மோதல் நரேந்திர மோதிக்கு தேர்தலில் பலனளிக்குமா?
வெளிநாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு உள்ளது - இந்தியாவில் ஏன் இல்லை?
தமிழகத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்திறங்கும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழில் செய்ய தீவிரமாக யோசித்து வருகிறோம் என்று இந்திய பிரதமர் மோதி நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தில் அறிவித்தார்.
பலர் இதனை வரவேற்று தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், அதே நேரம் பல நாடுகளில், ஏற்கனவே விமானங்களில் அறிவிப்புகள் தமிழில் உள்ளதாக கூறுகின்றனர்.
விமானங்களில் அறிவிப்புகள் தமிழில் செய்யப்பட தீவிரமாக யோசித்து வருகிறோமென்ற பிரதமர் மோதியின் அறிவிப்பு வரவேற்கதக்கதுதான். ஆனால், ஏன் சென்னை சர்வதேச விமான முனையத்தின் பெயரை மாற்றினார் என கேள்வி எழுப்புகிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.
அதிமுகவுடனே கூட்டணி; துரைமுருகனை தே.மு.தி.க சந்தித்தது ஏன்?
துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகதான் சந்தித்தோம் என்று தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் நிர்வாகிகளான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் இருவரும் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தனர் என்றார் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ்.
ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
"தற்போது நாங்கள் தெளிவாக கூறுவது என்னவென்றால், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. தொகுதி பங்கீடுகள் குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும்," என்று சுதீஷ் கூறினார்.
விரிவாக படிக்க: 'தேமுதிக நொந்து போயுள்ளது' - திமுக பொருளாளர் துரைமுருகன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்