You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யேமன் போர்: தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்த போர் நிறுத்தம்
மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்துவரும் யேமனில் தொடங்கிய சில நிமிடங்களில் போர் நிறுத்தம் முறிந்தது என அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் துறைமுக நகரமான ஹுடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹூதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.
ஹுடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், சண்டை நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஹுடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்டைகள் நடந்துகொண்டிருப்பதாக அரசாங்க ஆதரவு அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று சிலர் நம்பினர்.
உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் சண்டை நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது.
யேமன் தலைநகர் சானாவில் இருந்து மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹுடைடா நகரம் அந்நாட்டின் நான்காவது பெரிய நகரம். 2014-ம் ஆண்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் செல்வதற்கு முன்பு இது அந்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மையம்.
அரசாங்கத்தை ஆதரிக்கும் சௌதி தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த ஜூன் மாதம் முதல் இந்த நகரைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.
உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றுக்கு முற்றிலும் இறக்குமதிகளை சார்ந்திருக்கும் யேமனின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இந்த துறைமுக நகரம் இன்றியமையாத உயிர் காக்கும் பாதை.
2 கோடியே 20 லட்சம் யேமன் மக்களுக்கு ஏதோ ஒருவித உதவி தேவைப்படுகிறது. அடுத்த வேளை உணவு எப்படிக் கிடைக்கும் என்பது அந்நாட்டில் உள்ள 80 லட்சம் பேருக்குத் தெரியாது.
பிற செய்திகள்:
- பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தலையிடுகிறது அமெரிக்கா - செளதி கண்டனம்
- ராகுல்-ஸ்டாலின்: புதிய தலைமை, புதிய சூழலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கும்?
- அமெரிக்காவில் பார்சல் திருடர்களை பிடிக்க ஜி.பி.எஸ். கருவி: அமேசான் புதிய உத்தி
- வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்
- இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்