You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜமால் கஷோக்ஜி கொலையை யார் செய்தது? இன்னும் முடிவுக்கு வராத அமெரிக்கா
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவு சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் இருந்தே வந்தது என மத்திய புவனாய்வு நிறுவனம் நம்புவதாக தெரிவித்தும், இந்த கொலை தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் அளித்தார் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி ஐ ஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பான ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டை சி ஐ ஏ செய்துள்ளதாகவும் அதன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இது போன்ற ஒரு சம்பவம், முகமத் பின் சல்மானின் அனுமதியுடன்தான் நடந்திருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் நினைக்கின்றனர்.
கொலை தொடர்பாக பட்டத்து இளவரசர் சல்மானுக்கு ஏதும் தெரியாது என்று கூறும் சௌதி அரேபியா, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்ட கஷோக்ஜியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உயர் அதிகாரிகளிடம் இருந்தே கஷோக்ஜி கொலை உத்தரவு வந்துள்ளது என துருக்கி கூறுகிறது.
கஷோக்ஜிக்கு சௌதி அரேபியா மற்றும் துருக்கியில் இறுதி மரியாதையுடன் பிரார்தனைகளும் நடைபெற்றன.
பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரரும் அமெரிக்காவிற்கான சௌதி தூதருமான காலித் பின் சல்மான் செய்த ஒரு தொலைப்பேசி அழைப்பை வைத்து, சி ஐ ஏ மதிப்பீடு செய்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
காலித், கஷோக்ஜியை போனில் அழைத்து, அவர் தூதரகத்துக்கு பாதுகாப்பாக செல்லலாம் என உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.
எனினும், இதனை சௌதி தூதரகம் மறுத்துள்ளது.
இந்த செய்தி தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க வெளியுறவுத்துறையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் சி ஐ ஏ-வின் முடிவுகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும், கஷோக்ஜியை கொலை செய்தவர்களின் குழுவில் உள்ள ஒரு நபர், பட்டத்து இளவரசரின் கீழ் உள்ள மூத்த அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளதையும் அவர்கள் ஆய்வு செய்ததாக தெரிகிறது.
சௌதி பட்டத்து இளவரசருக்கு இந்த கொலையில் நேரடி தொடர்பு இருப்பதாக ஒரு ஆதாரம் கூட இல்லை என்றும் அமெரிக்க ஊடகங்களில் கூறப்படுகிறது.
"சல்மானுக்கு தெரியாமல் அல்லது அவர் தலையீடு இல்லாமல் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பே இல்லை" என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷோக்ஜிக்கு என்ன நடந்தது என்று சௌதி கூறுகிறது?
இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி கஷோக்ஜிக்கு மரணம் விளைவிக்கும் ஊசி செலுத்தப்பட்டதாக, வியாழனன்று ரியாதில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காவல் அதிகாரி ஷலான் பின் ராஜிஹ் தெரிவித்தார்.
அவர் மரணம் தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது
கொலை செய்ததாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ள எவரையும் தனக்கு தெரியவில்லை என ஷலான் கூறுகிறார்.
கஷோக்ஜி கொலை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் சௌதி முகவர்கள் குழுவே இதனை செய்துள்ளதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: