You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி அடிக்கடி கைது: ஐரோப்பிய நீதிமன்றம் கண்டனம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி அடிக்கடி கைது செய்யப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று கூறி ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்ட்ராஸ்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் அலக்ஸே நவால்னி தமது கைதுகள் குறித்து வழக்குப் பதிவு செய்திருந்தார். இன்று தீர்ப்பு வெளியானதை அடுத்து அவர் ஸ்ட்ராஸ்பெர்க் நீதிமன்றத்துக்கும் வந்திருந்தார்.
2012 முதல் 2014 வரை ஏழு முறை அலக்ஸே கைது செய்யப்பட்டது அரசியல் பன்முகத்தன்மையை ஒடுக்கும் நோக்கம் கொண்டது என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன் பிறகும் அவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
"நாம் வெற்றி பெற்றுவிட்டோம். அரசாங்கத்தை நீதிமன்றம் முழுமையாக வெளுத்துவிட்டது. மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒப்பந்தத்தின் பிரிவு 18-ஐ நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது" என்று அவர் தமது டிவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக குடிமக்களின் உரிமைகளும், சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று இந்தப் பிரிவு கூறுகிறது.
முன்னதாக, இந்த தீர்ப்பினை ஒட்டி ஸ்ட்ராஸ்பெர்க் நீதிமன்றத்துக்கு செல்வதற்காக, ரஷ்யாவை விட்டு வெளியேற நவால்னிக்கு அனுமதி மறுத்தது ரஷ்ய அரசு. நீதிமன்றம் விதித்திருந்த ஒரு அபராதம் காரணமாக காட்டப்பட்டது.
தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின் ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அதற்கெதிராக 2011-12 ஆண்டு காலகட்டத்தில் மாஸ்கோவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் அலெக்ஸே நவால்னி. பணி ஓய்வு வயதை புதின் அரசு உயர்த்தியதற்கும் இவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தி, அதில் அலெக்ஸே தவறு செய்ததாக தீர்ப்பு வந்ததால், அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடமுடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இழப்பீடு
நவால்னியின் குற்றச்சாட்டு சரியாக இருப்பதாக முடிவு செய்த நீதிமன்றம், அவருக்கு ரஷ்ய அரசு 71,950 அமெரிக்க டாலர்கள் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை 1998-ம் ஆண்டு ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தீர்ப்பை ரஷ்யா மதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அரசு மர நிறுவனமான கிரோவ்லஸ்-சில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக நவால்னி மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து அதனை நிறுத்திவைத்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம், சட்டத்துக்கு விருப்பம் போல விளக்கம் தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.
தம்மை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக புனையப்பட்ட வழக்கு இது என்று நவால்னி கூறிவந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :