You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை புதிய தூதரகத்துடன் இணைக்க அமெரிக்கா முடிவு
அமெரிக்கா உடனான பாலத்தீன விவகாரங்களை மேலாண்மை செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார்.
இந்த முடிவு நிர்வாகக் காரணங்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்டது என்றும், ஜெருசலேம், மேற்குக் கரை அல்லது காஸா மீதான தங்கள் கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் இது குறிக்காது என்றும் பாம்பேயோ கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு பாலத்தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"இரு நாட்டு கொள்கை அடிப்படையில் தீர்வு வழங்காமல், அகண்ட இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுகிறது, " என்று பாலத்தீன விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் சயீப் ஏரேகத் கூறியுள்ளார்.
பிரிக்கப்படாத ஜெருசலேம் நகரம் தங்கள் நிரந்தரத் தலைநகரம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. ஆனால் 1967இல் நடந்த மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் எதிர்காலத்தில் அமையவுள்ள தங்கள் தனி நாட்டின் தலைநகரம் என்று பாலத்தீனம் கூறுகிறது.
தற்போது மூடப்பட்டுள்ள துணைத் தூதரகம் மேற்கொண்ட பணிகள் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரின் கட்டுப்பாட்டில் இனி நடக்கும் என்று ஜெருசலேமில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் ரெனால்ட்ஸ் கூறுகிறார்.
தங்களைத் தனிமைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அதிபர் டிரம்பின் நிர்வாகம் மேற்கொள்ளும் இன்னொரு செயலாக இதைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் - பாலத்தீன விவகாரத்தில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த நடுநிலையை மீறி, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்தது.
இதை உலக நாடுகள் கண்டித்ததுடன், பாலத்தீன நிர்வாகம் அமெரிக்காவுடனான பேச்சுவார்தைகளை நிறுத்தவும் வழிவகுத்தது.
இந்த எதிர்ப்புகளை மீறி, இந்த ஆண்டு மே மாதம், தமது தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு அமெரிக்கா மாற்றியது.
பாலத்தீன விடுதலை இயக்கத்துடன் ராஜீய பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை மேற்கொண்ட அலுவலகம் வாஷிங்கடனில் மூடப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்தது.
"டிரம்ப் நிர்வாகம் பிரச்சனையின் ஓர் அங்கம். தீர்வின் அங்கமல்ல," என்று சயீப் ஏரேகத் கூறியுள்ளார்.
ஜெருசலேம் - சிக்கலின் மையம்
ஜெருசலேம் நகரம் இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சனையின் முக்கியப் புள்ளியாக உள்ளது.
ஜெருசலேம் மீதான இஸ்ரேல் அரசின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. 1993இல் கையெழுத்திடப்பட்டுள்ள இஸ்ரேல் - பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, ஜெருசலேம் நகரின் இறுதி நிலை அமைதிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு 1967 முதல் பல குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலேம் பகுதியில் நிறுவிய இஸ்ரேல் அங்கு சுமார் இரண்டு லட்சம் யூதர்களைக் குடியமர்த்தியுள்ளது.
இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றாலும், அதை இஸ்ரேல் மறுக்கிறது.
இஸ்ரேல் தலைநகராகஜெருசலேம் நகரை அமெரிக்கா அங்கீகரித்தது செல்லாது என்று டிசம்பர் 2017இல் ஐ.நா பொதுச் சபை பெரும்பான்மையாக வாக்களித்தது.
அமெரிக்காவைப் போலவே தாங்களும் தங்கள் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
பராகுவே மற்றும் கவுத்தமாலா ஆகிய நாடுகளும் மே மாதம் ஜெருசலேமுக்கு தங்கள் தூதரகங்களை மாற்றின. ஆனால் பராகுவேயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் தங்கள் தூதரகம் டெல் அவிவ் நகருக்கே மாற்றப்படும் என்று அந்நாடு அறிவித்தது. ஜெருசலேமுக்கு தங்கள் தூதரகத்தை மாற்றி மூன்று மாதத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :