ஆயுதங்கள் தவிர ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்க உள்ள பொருட்கள் எவை?

பட மூலாதாரம், इमेज कॉपीरइटKREMLIN.RU
ஆயுதங்களைத் தவிர ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கவிருக்கும் பொருட்கள் என்ன?
ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான '30 பில்லியன் டாலர்' பரஸ்பர முதலீட்டிற்கான இலக்கு நிறைவடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது இரு நாடுகளும் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான இருதரப்பு முதலீடுகளை செய்யவேண்டும் என விரும்புகின்றன.
இந்த இலக்கை 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என விரும்புவதாக கடந்த 11 மாதங்களில் மூன்று முறை ரஷ்யவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 2018 செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.
1990-ல் சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு, சில நடுநிலை 'நட்பு நாடுகள்' ரஷ்யாவுக்கு தேவைப்பட்ட சூழலில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான பிணைப்பு நெருக்கமானது.
இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் அரசியல் மற்றும் பொருளாதார இணக்கம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்குவதை தொடர்வதாக ரஷ்யா உறுதியளித்தது. அதேபோல், இந்தியாவில் இருந்து ரஷ்யா நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பாதுகாப்புத் துறையைத் தவிர...
இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கு முன் இந்திய வெளியுறவு அமைச்சர் இவ்வாறு கூறினார்: "இந்தியாவுக்கு மிக முக்கியமான நாடு ரஷ்யா, இருதரப்பினருமே உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது ரஷ்யா. இப்போது புதிய துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவாக்குகிறோம்.
அணுசக்தி, வங்கி, வர்த்தகம், மருந்துத்துறை, விவசாயம், கல்வி, போக்குவரத்து, சுற்றுலா, அறிவியல் என பல துறைகளில் ஒன்றிணைந்து செயல்படவிருக்கிறோம். மேலும் விண்வெளி தொடர்பான விஷயங்களில் இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்றாக இணைந்து செயல்படவிருக்கிறோம்."
"1960ஆம் ஆண்டு முதலே இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கூற்றுப்படி, 2012 மற்றும் 2016 க்கு இடையில், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு இறக்குமதியில் 68 சதவீதம் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்டது".
தற்போது இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையைத் தவிர பல பொருட்களை வர்த்தகம் செய்யவிருக்கின்றன என்பதோடு, இருதரப்பு முதலீடுகளும் அதிகரிக்கவிருக்கின்றன.
- ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள்:
- வைர நகைகள்
- பெட்ரோலியப் பொருட்கள்
- உரம்
- இரும்பு, எஃகு
- காகிதம் தொடர்பான பொருட்கள்
- அணு உலை உபகரணங்கள்
- கனிம எண்ணெய்
ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள்:
- மருந்துப் பொருட்கள்
- இயந்திரங்கள், அவற்றின் உதிரி பாகங்கள்
- உணவுப் பொருட்கள்
- மசாலா பொருட்கள்
- விமான பாகங்கள்
- கரிம வேதியியல் பொருட்கள்

பட மூலாதாரம், Getty Images
பட்டை தீட்டப்பட்ட வைரம்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வைரம், ஆபரணங்கள், நகைகள் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
ஆனால், ஐரோப்பா, பெல்ஜியம் போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவே.
ரஷ்யாவில் வைரத்தை தோண்டியெடுப்பது, பட்டை தீட்டுவது, மெருகூட்டுவது போன்ற அமைப்புகளை நிறுவுவதில் இந்திய வைர வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ரஷ்யாவில் தொழிற்சாலைகளை நிறுவ தங்களுக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என அவர்கள் கோருகிறார்கள். அப்போதுதான், அல்ரோசாவின் சுரங்கங்களிலிருந்து வரும் வைரங்களை அவர்கள் சுலபமாக அணுக முடியும்.

பட மூலாதாரம், AFP
தேயிலை
ரஷ்யாவின் வருடாந்திர தேயிலை நுகர்வு சுமார் 17 கோடி கிலோ. இதில் 30 சதவிகிதத்தை இந்தியா வழங்குவதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் கூறுகிறது.
தற்போது 4.8 கோடி கிலோவாக இருக்கும் ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியை 2020ஆம் ஆண்டுக்குள் 6.5 கோடி கிலோவாக அதிகரிக்க இந்தியா விரும்புகிறது,
மருந்துத் துறையில் ஒத்துழைப்பு
இந்தியாவும் ரஷ்யாவும், மருந்துத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஃபார்மா 2020 திட்டத்தின் கீழ் ரஷ்யாவில் சில கூட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான மருந்துகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.

பட மூலாதாரம், Getty Images
சாலைத் திட்டம்
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்துத் வழித்தடத்தை உருவாக்குவதில் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடம், இந்தியா, இரான், ரஷ்யா மற்றும் பல ஆசிய நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும்.

அணு சக்தி
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கூடாங்குளத்தில் 1,000 மெகாவாட் அணு மின் நிலையம் ரஷ்யாவின் உதவியில் நிறுவப்பட்டது. அங்கு இரண்டு அலகுகள் இயங்குகின்றன.
ரஷ்ய நிறுவனமான ரோஸ்டாடோம் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 12 அணு உலைகளை தயார் செய்யும் என்று 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசு கூறியிருந்தது.
அவற்றில் ஆறு உலைகள் கூடங்குளத்தில் நிறுவப்படும் என்றும் எஞ்சிய ஆறு அணு உலைகளும் அமையவிருக்கும் இடம் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அரசு கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














