தாய்லாந்து குகை: எலன் மஸ்க் மீது மீட்புதவியாளர் வழக்கு

கடந்த ஒரு சில மணிநேரங்களில் வெளியான உலகச் செய்திகளை சுருக்கமாகத் தொகுத்து வழங்குகின்றோம்.

எலன் மஸ்க் மீது தாய் குகை மீட்புதவியாளர் வழக்கு

தொழில்நுட்ப ஜாம்பாவானும், பில்லினியருமான எலன் மஸ்க் மீது தாய்லாந்திலுள்ள தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றிய பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளரை குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர் என்று எலன் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறி வருவதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறார்களை மீட்பதற்கு வெர்னன் உன்வர்த் உதவினார்.

இவர் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர் என்று கூறுவது உள்பட எலன் மஸ்க் சான்றுகள் இல்லாமல் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

எலன் மஸ்க் இவ்வாறு அவதூறாக பேசுவதை தடுக்க வேண்டும் என்றும், இழப்பீடாக 75 ஆயிரம் டாலர் வழங்க வேண்டும் என்றும் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கென்யா: மருத்துவமனையில் பெட்டிகளில் குழந்தைகளின் உடல்கள்

கென்யாவின் நைரோபி வட்டார ஆளுநர் மைக் சோன்கோ மருத்துவமனை ஒன்றை திடீரென ஆய்வு செய்தபோது, 12 குழந்தைகளின் உடல்கள் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கென்யாவின் தலைநகரில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையின் நிர்வாக குழுவை ஆளுநர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

பும்வானி குழந்தைகள் மருத்துவமனையில் உடனடியாக செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு, தரமான சுகாதார பராமரிப்பு அங்கு வழங்கப்படும் நோக்கில் பராமரிப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகள் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணத்தை காவல் துறை புலனாய்வு செய்து வருகிறது.

கென்யாவின் முன்னிலை பொது மகப்பேறு மருத்துவமனையாக பும்வானி இருந்து வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தவறுதலான சிகிச்சை அளித்தது உள்பட பல சர்ச்சைகளை பல ஆண்டுகளாக இந்த மருத்துவமனை எதிர்கொண்டு வருகிறது.

அமெரிக்க செனட் அவையில் நீதிபதியிடம் விசாரணை

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு பெயர் அறிவிக்கப்பட்டுள்ள பிரெட் கேவினோவ் பாலியல் தாக்குதல் தொடர்பாக அடுத்தவாரம் சென்ட் அவையில் விசாரிக்கப்படவுள்ளனர்.

நீதிபதி கேவனோவும், தன்னை இந்த நீதிபதி 30 ஆண்டுகளுக்கு முன்னதாக பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டும் கிறிஸ்டின் பிலாசெ ஃபோர்டு என்ற பெண்ணும் செனட் அவையில் விசாரிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கான நீதிபதியை உறுதி செய்வதில் சற்று தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று கூறி நீதிபதி கோவனோவ் மறுத்துள்ளார்.

பெட்டகத்தில் இறந்தோர் உடல்கள்: மெக்ஸிகோ மக்கள் எதிர்ப்பு

மெக்ஸிகோவின் மேற்கில் அமைந்துள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில் குறைந்தது 100 உடல்களை கொண்டிருக்கும் குளிர்பதன வசதியுடைய பெட்டகத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் கோபம் கொண்டுள்ள உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கௌடலஹாரா நகரில் இருக்கும் பிண அறைகள் எல்லாம் நிரம்பிய நிலையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த பெட்டகத்தை வேறிடத்திற்கு மாற்ற முயல்வதாக திங்கள்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வன்முறை தொடர்புடைய குற்ற சம்பவங்களில் இறந்தோரின் உடல்களை எரிப்பதை மெக்ஸிகோ சட்டம் அனுமதிக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :