புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப்

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப்

புளோரன்ஸ் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுவரை அங்கு புயலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.

புயலின் வேகம் வலுவிழந்த நிலையிலும், மேலும் பெரு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. கரோலினாவில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளில் மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள எட்டு கவுண்டிகளை பேரழிவு பாதித்த இடமாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, சொத்து இழப்பு நிவாரணங்களுக்கான மாணியங்கள் மற்றும் குறைந்த கட்டண கடன்களுக்கான மத்திய நிதி கிடைக்க பெறுகிறது.

2000 கைதிகளை விடுவித்த ருவாண்டா

எதிர்கட்சியின் முக்கிய நபர் உள்ளிட்ட 2000 சிறைக்கைதிகளை ருவாண்டா மன்னித்து விடுதலை செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தியது மற்றும் 1994 இனப்படுகொலையை மோசமாக பேசியதற்காக எஃப் டி யு - இங்கிங்கி கட்சியை சேர்ந்த வீக்ட்வார் இங்கபீரே கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதையடுத்து, இங்கபீரே உள்ளிட்ட 2,140 கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசாங்கள் முடிவு செய்தன. இது தொடர்பாக எந்த விளிக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும், கருணையின் அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 'சீரியல் கில்லர்'

டெக்ஸாசில் பாலியல் தொழிலாளிகள் நான்கு பேரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க எல்லை ரோந்து முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜான் டேவிட் ஒர்டிஸிடம் இருந்து தப்பித்த ஐந்தாவது பெண் போலீஸாரை தொடர்பு கொண்டார். அதிலிருந்து அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இதனையடுத்து லரேடோ நகரத்தில் உள்ள ஹோட்டலின் பார்கிங்கில் ஜான் கைது செய்யப்பட்டார்.

நைஜீரியா அமைச்சர் ராஜினாமா

நைஜீரியாவில் கட்டாய ஓராண்டு சேவை திட்டத்தை புறக்கணிக்க போலி சான்றிதழ் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்நாட்டின் நிதி அமைச்சர் கெமி அடெயோஷன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது 34 வயது வரை கெமி பிரிட்டனில் வாழ்ந்து வந்தார். 30 வயதிற்கு மேலானதால் நைஜீரியாவில் இதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததும், சமீபத்தில் அவர் இது தொடர்பாக வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானது என்று உள்விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :