You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இத்தாலி பாலம் இடிந்து விபத்து: மீட்புப் பணி தீவிரம்
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்த விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 15 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் டஜன் கணக்கான வாகனங்கள் 45 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகை தொடர்ந்து கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 12 பேரை காணவில்லை.
இத்தாலி முழுவதுதிலிருந்தும் வந்த 300 தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்களை கொண்டும், மலையேறும் கருவிகளை கொண்டும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
பாலத்தின் பிற பகுதியும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் நூற்றுகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதிக மழைபெய்து கொண்டிருந்த சமயத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது; பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான மொரண்டி பாலம் 1960ல் கட்டப்பட்டது. ஏ10 என்னும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த பாலம், உள்ளூர் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கொண்டுவருவதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது.
பாலம் இடிந்த சமயத்தில் அதன் மேல் 30-35 கார்களும், மூன்று கனரக வாகனங்களும் இருந்தன.
பெரிய அடுக்குமாடி கட்டடம் மற்றும் பாலத்தின் சில பகுதிகள் சரிந்து ரயில்வே தண்டவாளங்கள், நதி மற்றும் சேமிப்பு கிடங்கு ஒன்றின் மீதும் விழுந்தது. தரையில் இருந்த யாரும் இதில் பலியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. சிலர் காயமடைந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
இத்தாலியின் செஞ்சிலுவை சங்கத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் மார்சிலோ டே ஏஞ்சலிஸ், மீட்புப் பணியாளர்கள் இதை ஒரு நிலநடுக்கம் போன்று கருதி செயல்பட்டு வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
"நிலநடுக்கத்தில் மீட்புப் பணி ஆற்றுபவர்களை இந்த விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளோம். இதுவும் நிலநடுக்கம் போன்ற ஒரு சூழலே... மேலும் பிற இடங்களும் இடிந்து போகும் என்ற ஆபத்து இதிலும் உள்ளது என" மார்சிலோ டே ஏஞ்சலிஸ் என்றார்.
"மிகப்பெரிய முழக்கம் ஒன்று கேட்டது. முதலில் மின்னல் என்று நாங்கள் நினைத்தோம்" என இத்தாலி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
"நாங்கள் பாலத்திலிருந்து 5கிமீ தொலைவில் வசிக்கிறோம் இருப்பினும் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது…நாங்கள் பயந்துவிட்டோம்…கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது நகரமே ஸ்தம்பித்துவிட்டது." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விபத்தில் பாதிப்படைந்த இத்தாலி மக்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ள ஃபிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரூங், தேவைப்பட்டால் ஃபிரான்ஸ் இத்தாலிக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :