லட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா?

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

சீனாவில் முஸ்லிம்கள்

சீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என்கிறது சீனா. சீன உய்கர் முஸ்லிம்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரம் பயங்கரவாதத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்களுக்கு மட்டும் மறுகல்வி அளிக்கப்படும் என்று கூறி உள்ளது சீனா.

வாழ்வதற்கு வசதியான நகரம்

வாழ்வதற்கு வசதியான நகரமாக ஆஸ்திரிய தலைநகர் வியான்ன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் இருந்தது. ஓர் ஐரோப்பிய நகரம் இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல்முறை. மோசமான நகரங்களில் பட்டியலில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் முதலிடத்திலும், வங்காள தேசத்தின் டாக்கா நகரம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. உலகெங்கும் உள்ள 140 நகரங்களின் அரசியல், சமூகம் கல்வி, சுகாதாரம் மற்றும் குற்றங்களை ஆராய்ந்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்ட குழந்தைகள்

செளதி தலைமையிலான கூட்டணி படைகளின் தாக்குதலுக்கு பலியான டஜன் கணக்கான ஏமன் குழந்தைகளின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஹூதி கிளர்ச்சியாளர்கள் வலுவாக இருக்கும் வடக்கு மாகாண பகுதியான சாதாவில் இந்த நல்லடக்க நிகழ்வானது நடைபெற்றது. கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவரும் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டனர்.

நீக்கப்பட்ட எஃப்.பி.ஐ ஊழியர்

அனுபவம் மிகுந்த எஃப்.பி.ஐ ஏஜென்ட் ஒருவர் அமெரிக்க தேர்தல் சமயத்தில் டிரம்புக்கு எதிரான குறுஞ்செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவிக்கிறார். பீட்டர் எனும் பெயருடைய அந்த எஃப்.பி.ஐ ஏஜென்ட் ட்ரம்புக்கு எதிராக ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக குடியரசு கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

டிரம்பின் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல் என்று தான் நம்பும் உரையாடல் டேப் ஒன்றை டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. "இதுகுறித்து யாரும் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை" என அந்த ஆண் குரல் கூறுகிறது. அதிருப்தியில் உள்ள ஒரு முன்னாள் ஊழியர் என்று அவரை வெள்ளை மாளிகை விவரித்துள்ளது. அவர் பணியை இழந்தபின் தன்னை தாக்கி பேசுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :