You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போகோ ஹராம் தாக்குதல்: 15 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
நைஜீரியா ராணுவ வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் பேரிடர் நிறுவனமான நெமாவின் அதிகாரி ஒருவரும் புதன்கிழமையன்று நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான போர்னோவில் ராணுவ தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்துக்குள் இந்த பிராந்தியத்தில் ராணுவ இலக்கின் மீது நடக்கும் மூன்றாவது தாக்குதல் இது.
''வெனிசுவெலாவில் அரசு அடக்குமுறையை நிறுத்த வேண்டும்''
வெனிசுவெலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோ மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிகழ்வையடுத்து குடிமக்கள் மீது நடத்தப்படும் வன்முறை நிறைந்த அடக்குமுறையை அரசு நிறுத்தவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றனர் வெனிஸ்வேலாவின் ரோமன் கத்தோலிக்க பிஷப்கள்.
சனிக்கிழமையன்று ராணுவ அணிவகுப்பு நடந்தபோது அதிபர் நிகோலஸ் மடுரோ உரையாற்றுகையில் இரண்டு ஆளில்லா விமானங்கள் வெடிபொருட்களை தாங்கியவாறு அதிபரை நோக்கி வந்தது. இந்த விமான தாக்குதலில் அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது குடிமக்களை மனிதத்தன்மையற்ற வகையில் நடத்துவது அல்லது உரிய ஆதாரங்களின்றி சட்டத்துக்கு புறம்பான வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை நடக்கக்கூடாது என ரோமன் கத்தோலிக்க பிஷப்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவான் ரெக்யுசென்ஸ் உள்பட குறைந்தபட்சம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்னர். அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் விண்வெளியின் ராணுவப்படை
ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் இரான் நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தின் ஆறாவது பிரிவாக விண்வெளி ராணுவப்படையை உருவாக்குவது குறித்த திட்டங்கள் பற்றி அமெரிக்க துணை அதிபர் மைக் ஃபென்ஸ் வெளியிட்டுள்ளார்.
2020க்குள் இது குறித்த ஒரு துறையை தோற்றுவிப்பதற்கான முயற்சியில் தற்போது நாடாளுமன்றம் ஈடுபடவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஏவுகணை ஏவுவதை கண்டுபிடிக்கும் சென்சார்கள் உள்ளிட்ட சிறப்பு திறமைகளை கொண்டிருக்கும் வகையிலான புது படையை உருவாக்க வேண்டும் என அவர் ஃபென்ஸ் தெரிவித்துளளார்.
அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதற்கு எட்டு பில்லியன் டாலர்கள் செலவிடப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தை சிலர் எதிர்த்து வருகின்றனர். அமெரிக்க விண்வெளி அமைப்புகளுக்கு வரும் அச்சுறுத்தல்களை விமானப்படை திறம்பட சமாளிக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெலானியா டிரம்ப் பெற்றோர்களுக்கு அமெரிக்க குடியுரிமை
அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப்பின் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த பெற்றோர்கள் அமெரிக்க குடிமக்களாகியிருப்பதாக, அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.
வியாழனன்று குடியுரிமை பெறும் விழாவில் அவர்கள் பங்கெடுப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க குடிமக்கள் தங்களது உறவினர்கள் நிரந்தர குடியுரிமை பெற ஆதரவளிக்க முடியும் எனும் நடைமுறையின் கீழ் விக்டர் மற்றும் அமல்ஜியா நாவ்ஸ் இருவருக்கும் குடியுரிமை கிடைத்திருப்பதாக வழக்கறிஞர் நியூயார்க் டைம்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிபர் டிரம்ப் தனது பேரணிகளில் அடிக்கடி ஒரு விமர்சனம் வைப்பார். குடும்பத்தின் அடிப்படையில் குடியேறிகள் நுழைவதை, ''நாட்டுக்குள் பயங்கரவாதிகள் நுழையும் ஒரு வழி இது'' என கடுமையாக விமர்சனம் செய்துவந்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :