You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விரைவில் இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
இயற்கை மனிதர்களை தாக்கும்
விரைவில் இந்த பூமி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்றும், இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்வதேச பருவநிலை ஆய்வாளர்கள் குழு, பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு சஞ்சிகையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள், இப்போது நம்மை காப்பாற்றிவரும் சில இயற்கை வளங்கள், உயரும் வெப்பத்தால் நமக்கு எதிரியாக மாறும். இப்போது கார்பனை உள்வாங்கும் அமேசான் மழைக்காடுகள் ஒரு கட்டத்தில் கார்பனை உமில தொடங்கும். கடல் உயரம் 10 முதல் 60 மீட்டர் வரை உயரும். இதனால் பல பகுதிகள் இந்த புவியில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்று எச்சரித்து உள்ளனர். புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், காடுகளை காப்பது, அதிக அளவிலான மரங்களை நடுவது, மற்றும் குறிப்பாக பூமியுடனான நம் உறவை சீர் செய்து கொள்வது மூலமாக எதிர்வரும் அபாயத்திலிருந்து தப்பலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஸ்டாக்ஹோம் ரெசிலியன்ஸ் நடுவம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார தடை
இரான் அணு ஒப்பந்தம் 2015 - லிருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து இரான் மீது மீண்டும் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை முழுமையாக செயல்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த பொருளாதார அழுத்தங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்ட இரானுக்கு அழுத்தம் தரும் மற்றும் இரான் தன் தவறான செயல்களை நிறுத்திக் கொள்ளும் என்று தான் நம்புவதாக கூறுகிறார் டிரம்ப். இரான் அதிபர் ஹஸான் ரூஹானி, இந்த செயலினை 'உளவியல் போர்' என்று வர்ணித்துள்ளார்.
மனித உரிமைகள்
சிறைப்படுத்தப்பட்ட குடிமை சமூக மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்களை செளதி அரேபியா விடுவிக்க வேண்டும் என்று கனடா கோரியதை அடுத்து டொரன்டோவுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது செளதி. இந்த விவகாரத்தின் காரணமாக கனடா தூதரையும் வெளியேற்றியது செளதி. இந்த நடவடிக்கைகளுக்கு பதில் அளித்த கனடா அரசு, "நாங்கள் தொடர்ந்து மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்" என்று கூறி உள்ளது.
அனல்காற்று
அதிகரித்து வரும் வெப்பத்தினால் ஏற்படும் அனல் காற்றினால் ஐரோப்பிய மக்கள் தவித்து வருகிறார்கள். பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின் என பல ஐரோப்பிய தேசங்களில் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது. ஜெர்மனிலும் ஒருவரும், ஸ்பெயினில் ஏழு பேரும் வெப்பத்தின் காரணமாக பலி ஆகி உள்ளனர் என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை. வானிலை நிபுணர்கள் இனி வரும் நாட்களில் வெப்பம் மெல்ல குறையலாம் என்று நம்பிக்கை தருகின்றனர்.
சொகுசு காரும் அபராதமும்
பல முறை வேக கட்டுபாட்டை மீறி துபாயில் அதிவேகமாக சென்றுள்ளார் ஒரு பிரிட்டன் சுற்றுலா பயணி. இதனால் அவருக்கு 47,600 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அவர் வேகமாக சென்ற வாகனமானது சொகுசுவகை காரான லம்போகினி ஆகும். இது அந்த சுற்றுலா பயணியின் சொந்த வாகனம் அல்ல. இந்த வாகனத்தை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இப்போது இந்த அபராத தொகையை யார் கட்டுவது என்று கேள்வி எழுந்துள்ளது. இதனை நாங்கள் கட்டமாட்டோம் என்று காரை வாடகைக்கு அளித்த நிறுவனம் கூறுகிறது. ஆனால், வாகனத்தை ஓட்டியவர் சுற்றுலா பயணி என்பதால் இந்த அபராத தொகை காரின் உரிமையாளருக்குதான் விதிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :