You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகொரியா ரகசியமாக தனது அணுஆயுத திட்டத்தை தொடர்கிறதா?
வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க கிம் அரசு உறுதியளித்திருந்த போதிலும் வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்வதாக செய்திகள் வெளியானதால் அமைதி பேச்சுவார்த்தைக்காண அந்நாட்டின் நேர்மை மீது சந்தேகம் எழுகிறது.
இது தொடர்பான அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் கசிந்து வெளியானபோது, வடகொரியா தனது அணுசக்தி செறிவூட்டும் தளங்களை இன்னமும் மேம்படுத்தி வருவதாக தெரியவந்தது. ஆக உண்மையில் என்ன நடக்கிறது?
குற்றச்சாட்டுகள் என்ன?
அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகள் இவை தான்
- யாங்பியானில் உள்ள வடகொரியாவின் ஒரே அதிகாரப்பூர்வ அணுசக்தி செறிவூட்டும் தளமானது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- யாங்பியான் மட்டுமின்றி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரகசிய தளங்களில் செறிவூட்டும் பணியை அந்நாட்டு மேற்கொண்டு வருகிறது.
- அதன் பேலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு தேவையான செலுத்து வாகனங்களை தொடர்ச்சியாக ப்யாங்கியாங் தயாரித்து வருகிறது.
- எளிதாக சுமந்துச் செல்ல மற்றும் எளிதாக ஏவ பயன்படுத்தப்படும் திட எரிபொருள் இயந்திரங்களை கொண்டிருக்கும் ஏவுகணை உற்பத்தியை கிம் அரசு விரிவுபடுத்தியுள்ளது.
இந்த அறிக்கைகள் எவ்வளவு தூரம் நம்பகமானவை? அவை அறிக்கைகள் மட்டுமே மட்டுமே. ஆனால் மதிக்கப்படும் வடகொரியா பார்வையாளர்களால் அவை துல்லியமானவையாக கருதப்படுகின்றன.
அமெரிக்கப் புலனாய்வு சமூகத்தின் பெயரிடப்படாத பல்வேறு தகவல் அளிப்பவர்கள் மற்றும் யாங்பியான் தளம் குறித்த 38 செயற்கைகோள் புகைப்படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை எவ்வளவு முக்கியமானவை?
''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடந்த உச்சிமாநாட்டில் ஏற்பட்ட எந்தவொரு ஒப்பந்தங்களையும் மீறும் வகையில் அந்த செயல்பாடுகள் அமையவில்லை'' என விளக்குகிறார் எம்ஐடியின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அணு ஆயுத பரவல் நிபுணருமான விபின் நாரங்.
முன்னதாக உச்சிமாநாட்டின் முடிவில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலாமாக்குவதற்கான வேலையை செய்ய ப்யாங்கியாங் ஒப்புக்கொண்டது. இது சில கட்ட செயல்முறையாக பார்க்கப்பட்டது.
இந்த செயல்முறை விவரங்கள் குறித்து இரு தரப்பும் இன்னமும் விரிவான விளக்கம் தரவில்லை.
'' இது இரு தலைப்பட்சமாக மட்டுமோ அல்லது உடனடியாகவோ செயல்படுத்தப்படும் செயல்முறையாக இருக்கப்போவதில்லை . ஆகவே கிம் ஜாங்-உன் ஏற்கனவே இருக்கும் தளங்களில் பணிகளை தொடரலாம்'' என்கிறார் நாரங்.
வடகொரியா தனது அணுசக்தி செயல்பாடுகளை தொடர்வது உச்சிமாநாட்டின் முடிவில் இருந்த மனநிலையை குறைப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் அணு ஆயுதமற்ற மண்டலாமாக்க வடகொரியா கொடுத்த உறுதித்தன்மை குறித்த அதன் நேர்மை மீது சந்தேகம் எழுகிறது.
''இங்கே முக்கியமாகத் தெரியும் விஷயம் என்னவெனில் கிம் ஜாங் உன் ஜனவரியில் தனது உரையில் குறிப்பிட்டபடி அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏவுகணையில் இருக்க வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் பேலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை தொடர்ந்து செய்ய அவர் அவ்வுரையில் வலியுறுத்தியிருந்தார்'' என டிப்ளமட் இதழின் ஆசிரியர் அங்கித் பாண்டா கூறுகிறார்.
மிகப்பெரிய செய்தி என்ன?
திட எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனவே அது வட கொரியாவுக்கு மிகப் பெரியதொரு பலம். இதன்மூலம் வேகமாக அமைக்கக்கூடிய தளங்களிலிருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ முடிவதோடு அவற்றை தென் கொரியா மற்றும் அமெரிக்காவால் கண்டறியவும் முடியாது.
வட கொரியாவின் பல ரகசிய செறிவூட்டல் தளங்கள் குறித்து வெளிப்படையான தகவல்கள் ஏதும் பெரிது இல்லை.
இதுவரை யாங்பியானில் இருக்கும் தளம் குறித்தே வட கொரியா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இது போன்று பல ரகசிய தளங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
"வட கொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இம்மாதிரியான அனைத்து தளங்களையும் மூடாமல் சில தளங்களை மட்டும் மூடுவது வட கொரியாவின் தந்திரம்" என நராங் தெரிவிக்கிறார்.
நேரம் ஏன் முக்கியமானது?
இது சில காலமாக தங்களுக்கு தெரிந்த விஷயம்தான் என அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. சிங்கப்பூர் உச்சிமாநாட்டிற்கு முன் இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொல்லியிருக்கலாம்.
இது ஏன் இப்போது ஊடகங்களுக்கு கசிய விடப்படுகிறது?
"அணுசக்தி செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளிப்படையாக பெரிய அளவில் கூறப்படுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட முயற்சியைப் போல இது தோன்றுகிறது" என்று ஆபிரகாமியன் கூறுகிறார்.
அமெரிக்க உளவுத்துறையினர், தற்போது இந்தத் தகவலை வெளிப்படுத்த முடிவு செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
"தங்கள் 'இலக்கு அடையப்பட்டது' , ' வட கொரியாவினால் இனி அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இல்லை' என்பது போன்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திகளுக்கு பதிலளிப்பது" முதல் நோக்கமாக இருக்கலாம் என்று நாரங் விளக்குகிறார்.
எனவே இது டிரம்ப்பை ஓரளவு கட்டுப்படுத்தலாம். எனவே தான் முழுமையாக வெற்றியடைந்துவிட்டதாக டிரம்ப் கூறமுடியது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.
"இது வெளியுறவுக் கொள்கையை கண்டனம் செய்ய தூண்டுவதோடு, (வட) கொரியர்களிடம் மென்மையான அணுகுமுறையை கையாளக்கூடாது என்று டிரம்புக்கு அதிக அழுத்தத்தை அதிகரிக்கிறது."
இரண்டாவது சாத்தியமானது, அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகத்தால் ஒருங்கிணைப்பு நடவடிக்கையாகவும் இருக்கலாம். அமெரிக்கா, புலனாய்வு தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம், அதன் ரகசிய தளங்கள் மற்றும் செயற்பாடுகளை ஒப்புக் கொள்ள வடகொரியா மீது அழுத்தம் கொடுக்கலாம்.
"வட கொரியர்கள் தங்களாகவே, அவர்களின் தளங்களை வெளிப்படுத்தி, அமெரிக்க உளவுத்துறையினர் கூறும் பட்டியலுக்கு எதிராக இருப்பதாக உறுதிகூற வேண்டும் என்பதே எங்களது கணிப்பாக இருந்தது" என்று பாண்டா விளக்குகிறார்.
"இது, வட கொரியர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்துவது எந்த நோக்கத்தில் என்பது புரியவைக்கும்.
"ரகசிய செறிவூட்டல் தளங்களைப் பற்றி நமக்கு தெரியும் என்பதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறோம். அது தொடர்பான தகவல்களை வட கொரியர்கள் வெளிப்படுத்துகிறார்களா இல்லையா என்பதை பார்க்கலாம்."
இந்த அழுத்தம் வேலை செய்யுமா?
சிங்கப்பூர் உச்சி மாநாட்டிற்கு பிறகு, இதுபோன்ற அழுத்தம் உண்மையிலேயே பியோங்யாங்கை வழிக்கு கொண்டுவந்துவிடுமா என்பது அனைவரின் முன் இருக்கும் மாபெரும் கேள்வி.
வட கொரியாவின் தொடர் அணுசக்தி மற்றும் ராணுவ முயற்சிகள் தொடர்பாக சமீபத்தில் வெளியான அறிக்கைகள், அது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் திறன்களை பராமரிப்பது மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதையும் தொடரப்போவதாகவே கருதச் செய்கிறது.
வடகொரியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர்பாக சீனா ஏற்கனவே அதிகபட்ச அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று வடகொரியா நினைக்கலாம். சீனாவின் உதவியில்லாமல் அமெரிக்காவால் வடகொரியா மீதான தடைகளை தொடர முடியாது.
"அதிகபட்ச அழுத்தம் கொண்ட பிரசாரத்தை உடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறேன்' என்று கிம் ஜோங்-உன் சொல்லியிருக்கிறார் - அவர் சரியாக சொல்லியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்