You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜி7 மாநாடு: கூட்டணி நாடுகளை கடுமையாக விமர்சித்த அதிபர் டிரம்ப்
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் முடிவில் பிரிவினை ஏற்பட்டதையடுத்து, அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுடன் நெருங்கிய கூட்டணி கொண்ட நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"வர்த்தகத்தில் எங்களை ஏமாற்றும்" நாடுகளை பாதுகாக்க, "நேட்டோ (NATO) அமைப்புக்கான பெரும்பாலான செலவினங்களை" அமெரிக்கா செலுத்தியதாக டிரம்ப் தெரிவித்தார்.
"நியாயமான வர்த்தகம் என்பது தற்போது முட்டாள்தனமான வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து கனடா பிரதமர் ட்ரூடோ, "நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப் தற்போது என்ன கூறினார்?
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரில் உள்ளார் அதிபர் டிரம்ப். திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், நேட்டோ அமைப்பின் செலவினங்களுக்காக, அதில் உள்ள மற்ற உறுப்பினர் நாடுகளை விட அமெரிக்க அதிகம் செலவு செய்வதாக குறிப்பிட்டார்.
"அவர்கள் கட்டணங்களின் ஒரு பகுதிக்கு மட்டுமே செலுத்திவிட்டு சிரிக்கின்றனர்" என்று ட்விட்டரில் அதிபர் டிரம்ப் எழுதியுள்ளார்.
"ஐரோப்பாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதை தடுத்து வந்தாலும்", வர்த்தக ரீதியாக நியாயமே இல்லாமல் அமெரிக்கா கடுமையாக தாக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.
"மாற்றம் வருகிறது!" என்றும் அவர் எச்சரித்தார்.
கனடா "நேர்மை இல்லாமல்" நடந்து கொள்வதாகக் கூறி, ஜி7 மாநாட்டின் முடிவில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கூட்டு அறிக்கைக்கான அதரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் ட்விட்டரில் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ தவறான கருத்துகளை கூறியதாகவும், அமெரிக்க விவசாயிகள், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கனடா அதிகளவிலான வரிகள் விதித்ததன் பதில் இது என்று அவர் கூறினார்.
உச்சிமாநாடு முடிந்து செய்தியாளர்கள் சந்தித்த ட்ரூடோ, அமெரிக்க பணியாளர்களை தண்டிக்கவில்லை என்றும், கனடா நாட்டு மக்களை பாதுகாப்பது தன் கடமை என்றும் கூறினார்.
"கனடா மக்கள் அமைதியானவர்கள், ஆனால், எங்களை எப்படி வேண்டுமானாலும் நடத்த முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்
ஜி7 தலைவர்களிடையே முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கைக்கு ஆதரவு தராமல் இருக்கும் டிரம்பின் முடிவு, "கலகம்" மற்றும் "மனச்சோர்வை" ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்தார்.
அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் மற்ற ஜி7 கூட்டாளிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும், அவர்கள் கூட்டறிக்கைக்கு ஆதரவு தர உறுதியளித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்