You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம்: 14 நிமிடங்கள் பரபரப்பு
பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு.
14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம்
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மொரீசியஸ் அருகே சென்றபோது சுமார் 14 நிமிடங்கள் தகவல் தொடர்பற்று போனதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
பிறகு, அந்த விமானத்தின் தொடர்பு கிடைத்ததை தொடர்ந்து குழப்ப நிலை முடிவுக்கு வந்தது.
வட கொரியா செல்கிறார் சிரியா அதிபர் அசாத்
சிரியாவின் அதிபரான பஷர் அல்-அசாத், வட கொரியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வட கொரியாவின் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
2011-ஆண்டு அதிபராக பதவியேற்றது முதல் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வரவேற்பு அளிக்கும் முதல் வெளிநாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்தான்.
அணு ஆயுத சோதனை நடத்துவதாக வட கொரியா மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் மீதும் குற்றம்சாட்டப்படும் நிலையில், இரு நாடுகளுமே இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
அணுஆயுதங்களை சுமந்துகொண்டு ஐந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் ஆறாவது பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வாரா ஜோகோவிச்?
பாரீசில் நடைபெற்றுவரும் ஃபிரெஞ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டியில் தனக்கு எதிராக விளையாடிய வெர்டாஸ்க்கோவை அவர் 6-3 6-4 6-2 என நேர் செட்களில் வெற்றி கொண்டார்.
31 வயதாகும் நோவாக் ஜோகோவிச், இந்த தொடரை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
முறைகேடு குற்றச்சாட்டில் ஐசிஐசிஐ வங்கித் தலைவர்
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தா கோச்சார் மீது வங்கியின் நடத்தை விதிகளை மீறினார், விதிமுறைகளை மீறி சிலருக்கு உதவி செய்து அதன் மூலம் பலன் பெற்றார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐசிஐசிஐ நிர்வாகமும் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளது.