You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இறக்குமதி கட்டண விதிப்பை நிறுத்திய சீனா - அமெரிக்கா
சீனாவும் அமெரிக்காவும் இறக்குமதி வரிகள் விதிப்பை நிறுத்தி வைக்கப் போவதாக அறிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க சீனா ஒப்புக் கொண்டது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், வளர்ந்து வரும் வர்த்தக போரின் அச்சத்தை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சீனாவுடனான வருடாந்திர வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இது உதவும் என்றும் அமெரிக்கா கூறியது.
ஆனால், இக்குறைப்பு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
"அமெரிக்காவில் விவசாயம் மற்றும் ஆற்றல் சக்தியின் ஏற்றுமதியை அதிகப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது" என இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
"இது அமெரிக்காவில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வளர ஆதரவாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இரு நாடுகளிலும் வரிக்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் இது அமல்படுத்தப்படவில்லை.
150 பில்லியன் டாலர்கள் அளவிலான வரிக்கட்டணங்கள் சீன பொருட்களுக்கு விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமை என அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுசார் சொத்துகளை, சீனா திருடுவதை நிறுத்த அறிவுறுத்துவதே அவர் நோக்கம் என்று டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு ஏற்கனவே கட்டணங்களை விதித்துள்ளது அமெரிக்கா. அதிகளவில் இதனை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இந்த வரிக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனாவிற்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
இதே மாதிரி சீனாவும் அமெரிக்காவை மிரட்டியுள்ளது. சோயாபீன்ஸ், பன்றி கறி, வைன், பழங்கள், கார்கள் மற்றும் விமானங்கள் போன்ற அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா வரிக்கட்டணம் விதித்துள்ளது.
தற்போது போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் சாதமாக அமைந்துள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்