பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: தந்தை கலந்துகொள்ளவில்லை என மணமகள் வருத்தம்

சனிக்கிழமையன்று பிரிட்டன் இளவரசர் ஹேரியுடன் தனக்கு நடைபெறவுள்ள திருமணத்தில் தனது தந்தை கலந்துகொள்ள மாட்டார் என்று நடிகை மெகன் மார்கில் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை மீது தான் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும், அவரது நலத்தில் அவர் கவனம் செலுத்துவதற்கான இடைவெளியை கொடுக்க வேண்டும் என்று தாம் எப்போதுமே நம்பியதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

திருமணத்தின்போது தனது மகளை கரம் பிடித்து அழைத்து வர தாமஸ் மார்கில் இருப்பாரா என்ற சந்தேகம் கடந்த சில நாட்களாகவே நிலவியது.

அவர் ஓர் இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியுள்ளதாக புதனன்று செய்திகள் வெளியாகின.

இந்த வாரத்தில் முதன் முறையாக மெகன் மார்கில் இளவரசர் ஹேரியை சந்திக்கவுள்ளார். பிரிட்டன் அரசி மற்றும் அவரது கணவரான எடின்பர்க் கோமகன் ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.

தற்போது மெக்சிகோவில் இருப்பதாகக் கருதப்படும் தாமஸ் மார்கில் புகைப்படம் எடுக்கச் சூழ்ந்துகொண்டர்வர்களுக்கு போஸ் கொடுத்ததாக சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.

அந்த புகைப்படங்கள் எடுத்ததே அவருக்கு தெரியாததுபோல அமைத்துள்ள அந்தப் படங்கள், தாமஸ் திருமண ஏற்பாடுகளை செய்வதுபோன்ற காட்சிகளைக் கொண்டிருந்தன.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தாம் திருமணத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க செய்தி இணையதளம் ஒன்றிடம் திங்களன்று தாமஸ் கூறியிருந்தார். பின்னர் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதன்பின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இதய அறுவை சிகிச்சையால் தாம் திருமணத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மீண்டும் அறிவித்தார்.

தாமஸ் 'நம்பமுடியாத அளவுக்கு மன அழுத்தத்தை' அனுபவித்ததாக, மெகன் மார்கிலின் ஒன்றுவிட்ட சகோதரி சமந்தா கூறியுள்ளார்.

புதனன்று பிரிட்டன் வந்த மெகன் மார்கிலின் தாய் டோரியா ராக்லேண்ட் திருமணத்தின்போது அவரை கரம் பிடித்து அழைத்து வரலாம் அல்லது மெகன் மார்கில் தனியாகவே நடந்து வரலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: