உலகப் பார்வை: சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிறையிலிருந்து தப்ப முயற்சி

சிறையிலிருந்து தப்ப கைதிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றில் பத்தொன்பது சிறை கைதிகளும், ஒரு பாதுகாவலரும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் வடக்கு பிரேசில் நகரமான பெலமில் நடந்துள்ளது. சிறைக்கு வெளியே ஒரு ஆயுத குழு, கைதிகள் தப்ப உதவி உள்ளது. வெடிகுண்டு வைத்து சிறை மதிலை அந்த ஆயுத குழு தகர்த்துள்ளது. கடந்த ஆண்டு பிரேசில் அமேசான் பகுதியில் உள்ள மனாஸ் சிறையில் நடந்த கிளர்ச்சியில் 56 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு மிரட்டல்

தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது உள்நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் டிஜெ மில்லரை கைது செய்துள்ளது நியூயார்க் போலீஸ். மில்லர் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதே தொடர்வண்டியில் பயணம் செய்த ஒரு பெண் தனது கைபையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸுக்கு அலைபேசியில் தகவல் கொடுத்தார். மது அருந்திவிட்டு இவ்வாறாக மில்லர் தவறான தகவல் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

சிரியாவுக்காக பயணம் ரத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியாவில் நடந்த சந்தேகத்திற்குரிய ரசாயன தக்குதலில் கவனம் செலுத்துவதற்காக தனது லத்தீன் அமெரிக்கா பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்த விஷயத்தில் அமெரிக்கா அளிக்க வேண்டிய பதிலடியில் கவனம் செலுத்துவதற்காக டிரம்ப் வாஷிங்டனிலேயே தங்குகிறார். அதே சமயம் சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு குழு ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் டூமாவுக்கு உண்மை அறியும் குழுவை அனுப்புகிறது.

சுயநல ரஷ்யா : ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

சமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் பயன்படுத்த பார்க்கும் ரஷ்யர்களிடம் தொடர்ந்து போராடி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க செனேட்டார்களிடம் தெரிவித்துள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சக்கர்பர்க் பதிலளித்தார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் விசாரணையாளர் முல்லர், ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களை விசாரித்ததாகவும், தன்னை விசாரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணிப்பது எவ்வாறு என மார்க்கிடம் செனேட்டர்கள் கேள்விகளை எழுப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: