உலகப் பார்வை: அணு ஆயுதங்கள் குறித்து வட கொரியா - அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

அணு ஆயுதம்: பேச்சுவார்த்தை நடத்த தயார்

தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளனர். வட கொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்திக்கும் போது இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவும், வட கொரியாவும் ரகசிய மற்றும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் -னும் கலந்து கொள்ள இருக்கும் இந்த பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. முன்பே, இரு நாட்டு உயர்மட்ட தலைவர்களும் மூன்றாவது நாட்டில் சந்தித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர் சரிவு, பதவி விலகும் வங்கி அதிகாரி

வங்கியின் தொடர் சரிவின் காரணமாக, வங்கியின் தலைவர் பதவி விலகுகிறார். அவரது பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் சூழ்நிலையில், அவர் முன்னதாகவே பதவி விலகுகிறார். தொடர் சரிவை சந்தித்து வரும் வங்கியின் பெயர் டோயெட்சு வங்கி. இது ஜெர்மனியின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று. பதவி விலகுபவர் ஜான் க்ரியான். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஜான் அந்த வங்கியில் பணியாற்றி வருகிறார்.

டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சிரிய அதிபர் பஷார் அல் அசாத் மற்றும் அவரின் கூட்டாளியான ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கு "அதிக விலை கொடுக்க நேரிடும்" என அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டவுமா நகரில் டஜன் கணக்கான மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திங்களன்று விசாரிக்கும் என நம்பப்படுகிறது.சிரியா மற்றும் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றன.

அவர் ஒரு மனநோயாளி

கடந்த சனிக்கிழமை ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்தனர். பின், 48 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெர்மனி உள்துறை அமைச்சகம், இந்த தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு மனநோயாளி என்று கூறி உள்ளது. அந்த ஓட்டுநர் சம்பந்தப்பட்ட நான்கு இடங்களை சோதனையிட்டோம். ஆனால், அவர் ஒரு பயங்கரவாதி அல்லது அரசியல் நோக்கத்துடன் இந்த தாக்குதலை மேற்கொண்டார் என்பதற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

கைது செய்யப்பட்ட ஆறு பேர்

மோசமான வன்முறைசெயல்களில் ஈடுபடலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பேரை பெர்லின் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் 18 - 21 வயதிற்கு உட்பட்டவர்கள். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பெர்லினின் 21 கி.மீட்டர் மராத்தான் போட்டி நடைப்பெற்றது. இதில் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதாக உள்ளூர் செய்திதாள்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: