You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: விஞ்ஞானத்தில் வென்ற விஞ்ஞானி திருமண வாழ்க்கையில் தோற்றது ஏன்?
உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா?
உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும்.
1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன்.
இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது.
2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்சன் எழுதிய, ஐன்ஸ்டைன்: அவரது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் (Einstein: His Life and the Universe) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக பரிணமித்த ஐன்ஸ்டைன், தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த பல முயற்சிகளை செய்ய வேண்டியிருந்தது, ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் அதில் தோல்வியையே கண்டார் என்று வால்டர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'ஐன்ஸ்டைன்' என்பது, அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்தில் இருக்கிறது. "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற புகழாரத்தையும் பெற்றவர் ஐன்ஸ்டைன்.
ஐன்ஸ்டைனின் தோல்விக்கு காரணம் என்ன?
ஐன்ஸ்டைன் தனது திருமண வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக வால்டர் கூறுகிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் திருவினையாகவில்லை, குடும்ப வாழ்க்கை போர்க்களமாகவே இருந்தது.
உண்மையில், காதல் குறித்த ஐன்ஸ்டைனின் மனப்பான்மைதான் அவரது தோல்விக்கும் காரணம். விஞ்ஞானியான மிலேவா மாரிக் உடன் காதல் மணம் புரிந்தார் ஐன்ஸ்டைன். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர், கடுமையான அம்சங்களைக் கொண்ட கோரிக்கை பட்டியலை கொடுத்து, அதை கடைபிடிக்கவேண்டும் என்று மனைவியிடம் சொன்னார்.
குழந்தைகளுக்காகவாவது இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஐன்ஸ்டைன் நம்பினார்.
ஐன்ஸ்டைனின் பட்டியல்
வால்டர் இசாக்சனின் புத்தகத்தின் அடிப்படையில் பிரிட்டன் பத்திரிகை டெய்லி மெயில் இந்த பட்டியலை வெளியிட்டது. மாரிக் ஒரு காதலியாக இருக்கவேண்டாம், ஒரு வேலைக்காரியாக இருக்கலாம் என்ற கோரிக்கைகளின் பட்டியல் இது.
அந்த புத்தகத்தின்படி, 1914ஆம் ஆண்டு இந்த கோரிக்கை பட்டியலை எழுதும் கட்டாயத்திற்கு ஐன்ஸ்டைன் உள்ளானார். தனது முதல் மனைவியான மாரிக்குடனான திருமண வாழ்க்கை சீர்கெட்டுப் போவதை அவர் உணர்ந்தார்.
கணிதம் மற்றும் இயற்பியல் பயின்ற சில ஐரோப்பிய பெண்களில் மிலேவா மாரிக்கும் ஒருவர். குழந்தைகளின் நலனை முன்னிட்டு கணவன்-மனைவி ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டைன் மனைவியிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதற்காக அவர் மனைவியிடம் கொடுத்த பட்டியல் அதிர்ச்சியூட்டியது. மிலேவா மாரிக் கணவரிடம் வேலைக்காரியாக நடந்துக் கொள்ளவேண்டும் என்று ஐன்ஸ்டைன் சொன்னார். ஆனால் மனைவியை தான் நேசிக்கவேண்டும் என்றோ, அக்கறை செலுத்த வேண்டும் என்றோ எதிர்பார்க்கக்கூடாது என்று சொன்னார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானி.
அறிவார்ந்தவர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐன்ஸ்டைன், தனது மனைவியும் விஞ்ஞானியுமான மாரிக், கணவருக்காக மூன்று வேளையும் உணவு தயாரிக்க வேண்டும், வீட்டையும் தனது தனிப்பட்ட அறையையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும், தனது உடைகளை துவைத்து, ஒழுங்காக பராமரிக்கவேண்டும் என்று சொன்னார்.
தனது படுக்கையறையையும், படிக்கும் அறையையும் மனைவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டைன் விரும்பினார், ஆனால் தன்னுடைய மேசையை மனைவி பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்.
ஐன்ஸ்டைனின் கோரிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை. இதற்கு பதிலாக மனைவி தன்னிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார் ஐன்ஸ்டைன்.
தன்னிடம் மனைவி எதிர்பார்க்கக்கூடாதவை
மிலேவாவுடன் அமர்ந்து பேசவோ, அவரை வெளியில் அழைத்துச் செல்லவோ முடியாது என்றும், அதுபோன்ற எதிர்பார்ப்புகள் அவருக்கு இருக்கக்கூடாது என்றார் ஐன்ஸ்டைன். அதுமட்டுமல்ல, தனக்கு பிடிக்கவில்லை என்றால் மனைவி பேசக்கூடாது என்றும் ஐன்ஸ்டைன் கூறினார்.
படுக்கையறை அல்லது படிக்கும் அறையில் இருந்து வெளியே போ என்று சொன்ன அடுத்த கணமே மனைவி அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்பதையும் மனைவிக்கு கொடுத்த பட்டியலில் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டிருந்தார்.
ஐன்ஸ்டைனின் கோரிக்கைகளை அவரது மனைவி ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது, ஆனால் என்ன நடக்கும் என்று அவர் அச்சப்பட்டாரோ அதுவே நிகழ்ந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, பெர்லினில் இருந்த ஐன்ஸ்டைனைவிட்டு வெளியேறிய மாரிக், ஜ்யூரிக் சென்று அங்கு தனது மகன்களுடன் வசிக்கத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1919இல் அவர் விவாகரத்துக்காக விண்ணப்பித்து, திருமண பந்தத்தில் இருந்து விலகினார் மாரிக்.
ஐன்ஸ்டைனுக்கு பல பெண் தோழிகள் இருந்தனர். மேலும் 1912 ஆம் ஆண்டு முதல் இல்ஸா என்ற பெண்ணுடன் ஐன்ஸ்டைனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது, அந்த சமயத்தில் மாரிக்குடன் அவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிக்கை விவாகரத்து செய்த பிறகு 1919இல் ஐன்ஸ்டைன் இல்ஸாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு, தனது செயலாளரின் மகள் நியூமன் உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் ஐன்ஸ்டைன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்