வெளிநாடுகளில் கைதாவதை தவிர்க்க இவற்றை செய்யக்கூடாது

இ-சிகரெட்டை புகைப்பது, புத்தரை பச்சை குத்தியிருப்பது, ராணுவ வீரர்கள் அணிவது போன்ற உடையை அணிவது- இந்த விஷயங்கள் வெளிநாடுகளில் உங்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பிரிட்டன் அரசின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் விடுமுறை நாட்களில், வெளிநாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை விளக்கியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளது எனவும் அரசு கூறியுள்ளது.

இங்கே சில சிறந்த அறிவுரைகள்..

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில முரட்டுத்தனமான சைகைகள் நேடியாகவோ அல்லது இணையத்திலே செய்வது நல்லது அல்ல. இதற்காக நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம்.

தாய்லாந்து

உங்களால் தாய்லாந்து நாட்டிற்கு இ-சிகரெட்டை கொண்டு செல்ல முடியாது. அவை உங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனைக் கிடைக்கும்.

இலங்கை

புத்த புகைப்படங்களை அவமரியாதை செய்வது இலங்கையில் தீவிரமான குற்றமாகும். புத்தர் சிலைக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பிரிட்டன் சுற்றுலா பயணியான நவோமி கோல்மன், புத்தர் படத்தை பச்சை குத்தி இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் நாடு கடத்தப்பட்டார்.

ஜப்பான்

சில மருந்துகளை ஜப்பானுக்கு எடுத்துச்செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். விக்ஸ் இன்ஹெலர் மற்றும் கோடீன் கலந்த வலி நிவாரணிகள் ஜப்பானில் தடை உள்ளது. இதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம்.

கரீபியன்

கரீபியன் நாடுகளான பார்படோஸ் மற்றும் செயின்ட் லூசியாவில், ராணுவ வீரர்கள் அணிவது போன்ற உடையை அணியத் தடை உள்ளது. குழந்தைகள் உட்பட யாரும், இதுபோன்ற உடைகளை அணிய முடியாது.

நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பு, இந்த அறிவுரைகளைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: