You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிறந்த விருந்தோம்பல்': தென் கொரியாவை பாராட்டிய கிம் ஜாங்-உன்
தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவி வரும் "நல்லிணக்க சூழல்" மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம்-யோ-ஜாங் தலைமையில் பங்கேற்ற வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழு நாடு திரும்பிய உடன் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
தென் கொரியாவின் விருந்தோம்பல் முயற்சிகள் 'ஈர்க்கக்கூடிய' வகையில் இருந்தது என்று கிம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் பங்கேற்பு இரு கொரிய நாடுகளுக்கிடையேயான உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஆனால், வட கொரியா ஒரு பிரச்சார வெற்றியை பெறுவதற்கு இது அனுமதித்தது என்ற கவலையும் எழுந்துள்ளது.
"பிரதிநிதிகளின் அறிக்கையை பார்த்தவுடன், கிம் ஜாங்-உன் திருப்திகரமான உணர்வை வெளிப்படுத்தினார்" என்று கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
"வட கொரிய பிரதிநிதிகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்த தென் கொரியாவின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கண்டு கிம் மகிழ்ச்சியடைந்ததுடன், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்ததாக" அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் "நல்லிணக்க சூழலை" பயன்படுத்தி பேச்சுவார்த்தையின் மூலம் உறவை பலப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகளையும் அவர் தென் கொரியாவுக்கு வழங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனத்துக்குள்ளான கிம்மின் சகோதரி
கிம்மின் சகோதரியும், கிம் யோங்-நாமும் கடந்த 1950 ஆண்டு நடந்த கொரிய போருக்கு பின்னர் முதல் முறையாக வட கொரியாவின் சார்பாக தென் கொரியாவுக்கு சென்ற அதிமுக்கிய பிரதிநிதிகள் சந்திப்பை சமீபத்தில் மேற்கொண்டனர்.
வட கொரியாவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களென அமெரிக்கா வெளியிட்டுள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் கிம்மின் சகோதரி பெயர் இன்னும் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது பரவலாக விமர்சிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :