ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியை அச்சுறுத்தும் கடும்புயல்

வடக்கு ஐரோப்பாவெங்கும் வீசிவரும் கடும் சூறாவளி காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் அடங்குவர்.

ஜெர்மனியில் துயர்துடைப்பு மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவ்விரு தீயணைப்பு வீரர்களும் இறந்தனர்.

இந்த கடும் புயலால் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில் 13 குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெற்றோர்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தங்களது 13 குழந்தைகளை கட்டிப்போட்டு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் ஆஜரான பெற்றோர் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று வாதிட்டனர்.

56 வயதான டேவிட் டர்பின் மற்றும் 49 வயதான லூசி என்ற அந்த தம்பதியினர் மீது சித்தரவதை, துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகளை அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

தான்கர்ப்பமாக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர்அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

தான் மற்றும் தனது கணவரான கிளார்க் கேபோர்ட் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் அச்சமயத்தில் ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா: கேப்டவுனில் தண்ணீர் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு

தண்ணீர் அற்ற உலகின் முதல் பெரிய நகரமாக மாறிவிடும் என்று அஞ்சப்படும் தென்னாப்பிரிக்க நகரமான கேப்டவுனில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு அடுத்த மாதம் முதல் ஒரு நாளைக்கு 50 லிட்டராக குறைக்கப்படவுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியால் பிரபல சுற்றுலா நகரமான கேப்டவுன் பாதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :