You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் ஆஃப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி
ஆஃப்ரிக்கன் பெங்குவின், டேபிள் மலை, சூரிய ஒளி மற்றும் கடலை கொண்ட தென் ஆஃ ப்ரிக்கா தலைநகரான கேப் டவுன், உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ஆனால், தண்ணீர் தீர்ந்துபோகும் உலகின் முதல் முக்கிய நகரம் என்பதற்காகவும் கேப் டவுன் பிரபலமாகலாம்.
மார்ச் மாதத்திற்குள் தண்ணீர் தீர்ந்துபோகலாம் என அண்மைய கணிப்புகள் பரிந்துரைத்தன. கடந்த மூன்று வருடங்களாகப் பெய்த மிக குறைந்த மழை மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகையால் அதிகரித்துள்ள தண்ணீர் நுகர்வே இந்நெருக்கடிக்குக் காரணம்.
கடல் நீரை குடிநீராக்குவது, நிலத்தடி நீர் சேகரிப்பு திட்டங்கள், நீர் மறுசுழற்சி திட்டங்கள் என பிரச்சனையை தீர்க்க உள்ளூர் அரசு வேகமாக முயன்றுவருகிறது.
தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்றும், ஒரு நாளுக்கு 87 லிட்டர் தண்ணீருக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் 4 மில்லியன் கேப் டவுன் வாசிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காரை கழுவுவதற்கும், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆஃ ப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணியினர், போட்டிக்கு பிறகு இரண்டு நிமிடம் மட்டுமே குளிக்குமாறு கூறப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற தண்ணீர் தொடர்பான பிரச்சனைகள் கேப் டவுனில் மட்டும் இல்லை. உலகளவில் கிட்டதட்ட 850 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. வறட்சியும் அதிகரித்துள்ளது.
இந்த அத்தியாவசிய இயற்கை வளத்தை நாம் இன்னும் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். வளர்ந்து வரும் நாடுகளில், 80% தண்ணீர் கசிவினால் வீணாகிறது என ஜெர்மன் சுற்றுச்சூழல் ஆலோசனை மையம் கூறியுள்ளது. அமெரிக்காவின் சில பகுதிகளில், பழைய கட்டமைப்புகளால் 50% வரையிலான தண்ணீர் வீணாகிறது.
வளர்ந்து வரும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், தண்ணீர் மேலாண்மை மீதே தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றன. தண்ணீர் சவால்களுக்கு "ஸ்மார்ட்" தீர்வைப் பயன்படுத்துதல் இதுவே அவர்களில் கவனம்.
நகர்புற வீடுகளில் தண்ணீர் நுகர்வை ஒழுங்குபடுத்துவதற்காக, இணையத் தண்ணீர் மேலாண்மை அமைப்புடன் ஸ்மார்ட் தண்ணீர் மீட்டார்களை 'சிட்டுடாப்ஸ்' என்ற பிரான்ஸ் நிறுவனம் இணைத்தது.
பயன்பாட்டாளர்கள் தங்களது மொபைல் போன் மூலம் தண்ணீரை வாங்குவார்கள். ஸ்மார்ட் தண்ணீர் மீட்டார்கள் அவர்கள் செலுத்திய பணத்திற்கான தண்ணீரை மட்டும் விநியோகிக்கும். எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இணையத்தில் கண்காணிக்க முடியும். குழாயின் ஏதேனும் கசிவு இருந்தாலும் இணையம் மூலம் கண்காணிக்கலாம்.
இதற்கிடையே மற்ற நிறுவனங்கள், புதிய நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை எடுக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.
காற்றில் இருந்து தண்ணீரை சேகரிக்கும் திறன் கொண்ட சாதனத்தை 'வாட்டர்சீர்' எனும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவில் நீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பல நகராட்சிகள், நீர் சேமிப்பை மேம்படுத்துவதற்கு வாட்டர்சீர் சாதனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை ஆராய்ந்து வருவதாக இதனை உருவாக்கிய நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்த சாதனம் இன்னும் சோதனையிலே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்